நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படம் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் இன்னும் 10 நாட்கள் வரை சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்து வருகின்றன. இந்த 2 படங்களுமே நிறைவடையும் நிலையில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இதற்கிடையே நடிகர் சிவகார்த்தியேகன் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்தான் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் ஷூட்டிங் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் சுதன் தயாரிப்பிலும் நடிகர் சிவகார்த்திகேயன் 2 படங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டு கால்ஷீட் தந்திருக்கிறார். இதில் ஒரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. ஆனால் தெலுங்கு பட நடிகர் நானி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்ததால், இந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு இயக்குனர் சிபி சக்ரவர்த்தி அந்த படத்துக்கு போய்விட்டார்.
அதனால் அந்த படத்துக்காக கொடுக்கப்பட்ட கால்ஷீட்டை அப்படியே மாற்றி குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்க முடிவானது. அதன்படி அவர் ஸ்கிரிப்ட் எல்லாம் தயார் செய்து சிவகார்த்திகேயனிடம் கொடுத்த நிலையில், ஸ்கிரிப்ட்டை படித்த சிவகார்த்திகேயனும் உற்சாகமாகி படத்தை இயக்கவும் ஓகே சொல்லி விட்டார்.
ஆனால் இந்த படத்தின் கதை அப்பா மகன் சென்டிமென்ட் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்போது அமரன் போன்ற அதிரடி கதாநாயகனாக சிவகார்த்திகேயன் மாறிய நிலையில், அவர் ஆரம்பத்தில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற யதார்த்த கதைக்களத்தில் இந்த படத்தின் கதை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் மிகவும் வெயிட்டான கேரக்டராக அப்பா கேரக்டர் இருப்பதால் அதில் யாரை நடிக்க வைக்கலாம் என பலத்த ஆலோசனைக்கு பிறகு மலையாள நடிகர் மோகன்லாலை தேர்வு செய்திருக்கின்றனர். இதன்மூலம் கேரளாவிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு அப்பாவாக ஜில்லா படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இப்போது சிவகார்த்திகேயனுக்கும் அப்பாவாக நடிக்க இருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.





