தமிழ் சினிமாவில் எப்படி நம்பர் ஒன் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறாரோ, அதேபோல் மலையாள திரையுலகில் ஜாம்பவானாக இருப்பவர் மோகன் லால். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் மோகன்லால், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து இருக்கிறார்.
கிட்டத்தட்ட 400க்கும் ஏற்பட்ட திரைப்படங்களை அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக மோகன்லால் மலையாளத்தில் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. மலையாள மட்டும் இன்றி, தமிழ் சினிமாவிலும் மோகன்லால் நடித்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த இருவர் திரைப்படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அரசியல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம், அந்த சமயத்தில் மிகப் பெரும் பேசு பொருளாக மாறியது. இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு, கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அவர் நடித்தார்.
அந்த திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. இதன் பிறகும் தமிழில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு விஜய் உடன் ஜில்லா படத்தில் நடித்தார் மோகன்லால். 2014 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இதில் காஜல் அகர்வால், சூரி, நிவேதா தாமஸ், மகத் ஆகியோர் நடித்திருந்தனர்.
மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஆர் டி நெல்சன் இயக்கியிருந்தார். தந்தையுடன் சேர்ந்து ரவுடிசம் செய்யும் விஜய் ஒரு கட்டத்தில் காவல் அதிகாரியாக மாற, தனது தந்தையை திருத்த போராடுவார். இதனை மையப்படுத்திய படத்தின் காட்சிகள் நகரும் வகையில் எடுக்கப்பட்டன. இந்த திரைப்படத்துடன் அஜித்தின் வீரமும் வெளியானது.
வீரம் படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது ஜில்லா அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் ஜில்லா திரைப்படத்தில் நடித்தது குறித்து மோகன்லால் பேசியிருக்கிறார். அதில், ஒருமுறை திடீரென விஜய்யிடம் இருந்து தனக்கு போன் வந்ததாகவும், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தான் ஜில்லா படத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மோகன்லாலின் இந்த பேச்சு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.





