இசைத்துறையில் கொண்டாடப்படும் ஒரு பிரபல கலைஞராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். ஜெய்ஹோ என்ற பாடலுக்கு இசையமைத்து ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நாயகன். மத்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதை 7 முறை வென்றவர். சில தினங்களுக்கு முன் ஏ ஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு, தன் கணவரை பிரிவதாக அறிவித்தது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த சூழலில் ஏ ஆர் ரகுமானின் இசைக்குழுவில் கிடார் இசைக்கலைஞராக உள்ள மோனிகா டே என்ற இளம் பெண்ணும் தன் கணவர் மார்க் என்பவரை பிரிவதாக அறிவித்திருந்தார். உடனே ஏ ஆர் ரகுமானுக்கும் மோனிகா டேவிற்கும் உள்ள நட்பு காரணமாகவே சாயிரா பானு தனது கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிந்து விட்டார் என்று பரபரப்பாக தகவல் பரவியது.
இதுகுறித்து சில யூடியூப் சேனல்களிலும் சிலர் ஏ ஆர் ரகுமான் மற்றும் மோனிகா டே இருவரையும் இணைத்து தவறாக பேசிய வீடியோக்கள் வெளியாகி அது வைரலானது. இதற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் தனது இன்ஸ்டால் பதிவில் வருத்தம் தெரிவித்திருந்தார். என் அப்பா ஒரு சிறந்த மனிதர் அவர் ஒரு லெஜன்ட். அவரைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
அதே நேரத்தில் தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூப் சேனல்களுக்கு ஏ ஆர் ரகுமான் தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதற்கிடையே ஏ ஆர் ரகுமான் மனைவி சாயிரா பானுவும், உலகிலேயே மிகச் சிறந்த மனிதர் ஏஆர் ரகுமான். அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என ஆடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இசைக்கலைஞர் மோனிகா டே அதில் கூறியிருப்பதாவது, எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
என் மீதும் ஏ ஆர் ரகுமான் அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக் குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் என்னை காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். ஏஆர் ரகுமானுடன் தனக்கு உள்ள உறவு தந்தை, மகள் போன்றது என்று அவர் கூறியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.





