முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களை குறிவைத்தே படங்கள் தயாரிக்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. குறிப்பாக 1980களில், அதுபோல் பண்டிகை காலங்களில் அதிக எண்ணிக்கையில் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகும்.
அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த போட்டி படங்கள் இருக்கும். 12 முதல் 15 படங்கள் தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை காலங்களில் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தும். புத்தாடை, பட்டாசு, பொங்கல் கொண்டாட்டம் என்பதோடு புதுப்படங்களை குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பதும் பண்டிகையின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.
அதே நேரத்தில், அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் என விசேஷ காலங்களில் வெளியாகும் படங்களுக்கு மட்டுமே குடும்பமாக செல்வதும், பலரது வழக்கமாக இருந்தது. இளம் வயதினர் மத்தியில் மட்டுமே சினிமா குறித்த பேரார்வம் இருந்த நிலையில், குடும்பத்தினர், நடுத்தர வயதினர் அடிக்கடி சினிமா பார்க்க விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அந்த பார்மூலா மாறிவிட்டது. எப்போது வேண்டுமானாலும், சினிமாவுக்கு செல்லும் மனநிலையில், ரசிகர்கள் உள்ளனர். புதுப்படம் ரிலீஸ் ஆனால், முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது கூட பலருக்கு ஹாபியாக மாறிவிட்டது. அதனால்தான் ரசிகர் காட்சி என தனியாக முன்னணி நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது கார்த்தி நடித்த ஜப்பான், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் ஜப்பான் படம் பிளாப் ஆனது. இப்போது கடந்த பொங்கல் பண்டிகையின் போது அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1, மேரி கிறிஸ்தமஸ் என 4 படங்கள் ரிலீஸ் ஆகியும், கேப்டன் மில்லர் மட்டுமே அதிக வசூல் புரிந்தது. ஆனால் விமர்சன ரீதியாக படம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் வருகிற தீபாவளி பண்டிகைக்கு அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி, சூர்யா நடித்த கங்குவா, பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐசி, கவின் நடித்த கிஸ் ஆகிய 4 படங்கள் ரிலீஸ் ஆகலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த படங்கள் தீபாவளிக்காக காத்திருக்கின்றன. வரும் நாட்களில், வேட்டையன், தக்லைப் படங்களும் தீபாவளி ரிலீஸ் படங்களில் லிஸ்ட்டில் சேர வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.





