இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவியாளராக இருந்தவர் மிஷ்கின். விஜயின் யூத் படத்தின்போது, பணிபுரிந்த மிஷ்கின் கவிஞர் வாலி எழுதிய பாடலை மாற்றி விட்டு தனது நண்பர் கபிலன் எழுதிய வரிகளை உள்ளே சேர்த்தார். இதுவே ஆள் தோட்ட பூபதியாக வெளியாகி ஹிட் அடித்தது. இந்த சம்பவத்தை மிஷ்கினே பல மேடைகளில் கூறி இருக்கிறார்.
சினிமாவில் நீண்ட காலம் உதவியாளராக இருந்த அவர், சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் படம் ரிலீஸ் ஆன சமயத்தின்போது எவ்வித வரவேற்பையும் பெறவில்லை. நாட்கள் செல்ல செல்ல வால மீனுக்கும் பாடல் ஹிட் ஆக படமும் ரீச் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அஞ்சாதே படத்தை எடுத்தார் மிஷ்கின்.
நெருங்கிய நண்பர்கள் இருவர், அதில் ஒருவன் போலீசுக்கு முயற்சி செய்ய இன்னொருவன் ரவுடியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். ஆனால் ரவுடி போலீசாகவும் போலீஸ் ரவுடியாகவும் மாற இதற்குள் ஆள் கடத்தல் கும்பலும் நுழைய என்ன ஆனது மீதி கதை என்பதை தனது நேர்த்தியான திரைக்கதையின் மூலம் நகர்த்தி சபாஷ் போட வைத்தார் மிஷ்கின். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.
இதன் பிறகு நடிகராக ஆசைப்பட்டு நந்தலாலா படத்தை அவர் எடுத்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பேசப்பட்டாலும் ரசிகர்களை கவர தவறியதால் தோல்வி அடைந்தது. பிறகு யுத்தம் செய் திரைப்படத்தின் மூலம் மீண்டு வந்த மிஸ்கின், ஜீவாவை வைத்து முகமூடி திரைப்படத்தை எடுத்து தோல்வி அடைந்தார்.
இதை எடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என அனைத்து திரைப்படங்களும் பேசப்பட்டன. தற்போது இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சவரக்கத்தி படத்தில் நடித்திருந்த அவர், சூப்பர் டீலக்ஸ், பேச்சுலர், மாவீரன், லியோ உள்ளிட்ட திரைப்படங்களிலும் வந்து போனார். தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கி முடித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படத்தை இயக்குகிறார். இதற்கு டிரெயின் என பெயரிடப்பட்டுள்ளது. ரயிலில் பரபரப்பாக நடக்கும் காட்சிகளை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இயக்குனர் வெற்றிமாறன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறனை தனது படத்தில் நடிக்க வைப்பதே லட்சியம் என்று கூறியிருந்தார். ஆனால் இயக்குனரோ இதில் விருப்பம் இல்லாதது போலவே பேட்டியளித்து வந்தார். இப்படியான சூழலில், மிஷ்கின் இயக்கத்தில் வெற்றிமாறன் நடிக்க இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.





