மிஷ்கின் தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் என்பதை பலரும் அறிவோம். சமீப காலமாக பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் மிஷ்கின். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவராக மிஷ்கின் திகழ்கிறார். ஆனால் அவரது மேடை பேச்சுக்கள் பல சர்ச்சைகளை கிளப்புவது உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு “துப்பறிவாளன் 2” விவகாரத்தில் நடிகர் விஷாலை மிஷ்கின் ஒரு மேடையில் கண்டபடி பேசியதை நாம் பார்த்திருப்போம். மிஷ்கின் என்றாலே அந்த மேடை பேச்சுத்தான் பலருக்கும் ஞாபகம் வரும். அதனை தொடர்ந்து பல பேட்டிகளில் மிஷ்கின் பலரை குறித்து மிக சர்ச்சையாக பேசியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பட விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் தனது பெற்றோரையே கெட்ட வார்த்தை போட்டு திட்டியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
“தேன் விற்பவர் என்னிடம் ஐந்து லிட்டர் தேன் கொடுத்தார். ஏற்கனவே வீட்டில் 15 லிட்டர் தேன் இருக்கிறது. கொடுப்பது தேன் என்பதால் வேண்டாம் என்று கூற முடியவில்லை. கொடுத்தவர் சிகரெட்டையோ மதுவையோ கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடலாம். ஆனால் தேனை கொடுக்கிறார், எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்.

ஆதி காலத்தில் இருந்து அனைத்து நோயையும் தீர்க்க கூடிய தேனை கொடுக்கிறார். ஆனால் அது ஒரிஜினலா இல்லையா என்ற சந்தேகம் வருகிறது. மேலும் என்னுடைய அப்பாவும் அம்மாவும் நான் சிறு வயதில் இருக்கும்போது யாரையும் எளிதில் நம்பிவிடாதே என்று கூறியிருக்கிறார்கள்” என்று பேசிய மிஷ்கின் தனது பெற்றோரை ஒரு கெட்ட வார்த்தை போட்டு திட்டினார். அவரது பேச்சால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.





