நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று தெரிவிக்கப்பட்டது. அப்போதே படத்திற்கான டைட்டிலும் அறிவிக்கப்பட்டது.
அத்துடன் சரி அதன் பிறகு படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் சூட்டிங் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் இந்த திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டு, அதை வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தார் இயக்குனர் மகிழ் திருமேனி.
ஆனால் இதில் இறுதி கட்ட சூட்டிங் குறித்து இன்னும் தகவல் வெளியாகாமல் உள்ளது. முதலில் புனே, ஹைதராபாத் பகுதிகளில் இதன் சூட்டிங் நடத்த இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அடுத்த கட்ட அப்டேட் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோர் நடித்திருப்பதும் சூட்டிங் ஸ்பாட்டில் வெளியான புகைப்படத்தை வைத்தே ரசிகர்கள் ஊர்ஜிதப்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்ல விடாமுயற்சிக்கு அனிருத்தான் இசையமைக்கிறாரா என்ற தகவலும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவும் விடாமுயற்சி குறித்த அப்டேட்களை வெளியிடாமல் விளையாடி வருகிறது.
இப்படியான சூழலில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. இதனை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. எண்பதுகளின் காலகட்டத்தில் வருவது போல் இதற்கான காட்சிகள் அமைக்கப்படுகின்றனவாம். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்தையும் அஜித்தை வைத்து எடுக்க மைத்ரி ஃபிலிம்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அந்த தயாரிப்பு நிறுவனம், லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகி உள்ளது. ஒருவேளை அஜித் லோகேஷ் கனகராஜ் படத்தை தான் மைத்திரி நிறுவனம் தயாரிக்க இருக்கிறதோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





