தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் கரு பழனியப்பன். கடந்த 2003ம் ஆண்டில் வெளியான பார்த்திபன் கனவு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் சினேகா நடித்திருந்தனர். இதில் சினேகா 2 வேடங்களில் நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே இயக்குனர் கரு பழனியப்பனுக்கு தமிழக அரசின் சிறந்த அறிமுக இயக்குனர் விருது கிடைத்தது. தொடர்ந்து கரு பழனியப்பன் விஷால் நடித்த சிவப்பதிகாரம் சேரன் சினேகா நடித்த பிரிவோம் சந்திப்போம் படங்களை இயக்கினார்.
அதன்பிறகு மந்திரப்புன்னகை சதுரங்கம் ஜன்னல் ஓரம் ஆகிய படங்களை இயக்கினார். 2013ம் ஆண்டில் ஜன்னல் ஓரம் படம் வெளியான பிறகு அவர் படம் எதுவும் இயக்கவில்லை. ஹவுஸ்ஃபுல் நட்பே துணை டி பிளாக் யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
பிறகு டிவி சேனல் ஒன்றில் அவர் விவாத மேடை நிகழ்ச்சியில் நடுவராகவும் சில ஆண்டுகள் இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் இயக்குனராக ரீ என்ட்ரி தருகிறார். நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை கரு பழனியப்பன் இயக்கி வருகிறார். தேனியில் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு 20 நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
மேலும் இந்த படம் சமையல் கலைஞர்களை பற்றியது. குதுப்பி என்ற நாவலை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. இந்த படத்துக்கு கரு பழனியப்பன் குக்கர் என வித்யாசமான டைட்டிலை வைத்துள்ளார். குக்கர் என்றால் சமைக்கிற பாத்திரமாக உள்ள நிலையில் இப்போது சமையல் கலைஞர்களும் குக்கர் என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்று கரு பழனியப்பன் கூறுகிறாராம்.
வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள குக்கர் பட விழாவில், இந்த குதுப்பி நாவல் பல நூறு பிரதிகள் சொந்தமாக அச்சிட்டு இயக்குனர் கரு பழனியப்பன் அனைவருக்கும் இலவசமாக வழங்க உள்ளார். இந்த நாவல் அவுட் ஆஃப் ஸ்டாக் என்ற நிலையில் இந்த நாவலின் கதை தான் குக்கர் படத்தின் கதை என்று படம் வெளியாகும் முன்பே அதை பப்ளிசிடி செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





