மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர். கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குறும்படங்கள் எடுத்தவர். இவரது குறும்படத்தை பார்த்து முதலில் பாராட்டியவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்.
அதன்பிறகு, எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் வங்கியில் பணிசெய்துக்கொண்டே நேரடியாக மாநகரம் படம் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர்தான் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனது முத்திரையை பார்த்து, தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து கைதி படமும், விக்ரம் படமும் லோகேஷ் கனகராஜை வேற லெவல் இயக்குனராக, தமிழ் சினிமாவில் உயர்த்தியது. மாஸ்டர் படம் பெரிய அளவில் ரீச் ஆகாத நிலையிலும், லியோ படத்துக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. ஆனால் லியோ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை கொடுத்தது.
இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, நண்பராக சத்யராஜ் நடிக்கிறார். மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு இருவரும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தில் இந்தி நடிகர்களில் யாரேனும் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டார். இதற்காக பாலிவுட் ஸ்டார் நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ரஜினிக்கு வில்லனாக நடிப்பது குறித்து யோசித்த அவர்கள், தங்களது இமேஜ் இதனால் டேமேஜ் ஆகிவிடும் என்று ஒதுங்கிக்கொண்டனர். காரணம், ரஜினிக்கு வில்லன் என்றால் ரஜினியை ஹீரோவாக்கி, வில்லனை ஜீரோவாக்கி விடுவர் என்பதால்தான்.
இந்தி நடிகர்கள் நோ சொன்னதால், அடுத்து தெலுங்கு பக்கமாக தன் வலையை வீசினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தெலுங்கில் பிரபல நடிகராக உள்ள நாகர்ஜூனாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் ஓகே சொல்லி இருக்கிறார். இதையடுத்து கூலி படத்தில் ரஜினியுடன் வில்லனாக மோதப் போகிறவர் நாகர்ஜூனா என்பது உறுதியாகி விட்டது. இவர் ஏற்கனவே கார்த்தியுடன் தோழா படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் என்பதும், குபேரா படத்தில் தனுஷூடனும் நாகர்ஜூனா நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





