இயக்குனர் பி மாதவன் இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த பி மாதவன் இயக்கிய முதல் படம் மணியோசை. இந்த படம் தோல்வி அடைந்தது. அதனால் மனச்சோர்வில் இருந்த பி மாதவனை அழைத்து தனது நடிப்பில் ஒரு படம் இயக்குமாறு சிவாஜி கணேசன் சொன்னார்.
அந்த படம்தான் அன்னை இல்லம். தனது வீட்டின் பெயர் அன்னை இல்லம் என்பதால் அதையே படத்துக்கு டைட்டிலாக கொடுத்ததோடு தனது நண்பர் எஸ் ஆர் சந்தானம் என்பவருடன் இணைந்து நடிகர் சிவாஜியே இந்த படத்தை சொந்தமாகவும் தயாரித்தார். கே வி மகாதேவன் இந்த படத்துக்கு இசையமைத்தார்.
இந்த படத்தில் சிவாஜி கணேசனுடன் தேவிகா முத்துராமன் எஸ்வி ரங்காராவ் எம்என் நம்பியார் விகே ராமசாமி நாகேஷ் ஜெயந்தி சச்சு ஓஏகே தேவர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஊருக்கெல்லாம் வாரிக் கொடுத்த வள்ளல் ஆக உள்ள எஸ்வி ரங்காராவ் ஒரு கட்டத்தில் ஏழையாகி விடுகிறார். அவர் மீது கொலை பழி விழுகிறது. மூத்த மகன் சிவாஜி அவருடனும் இளைய மகன் முத்துராமன் அம்மாவுடனும் வாழ்கிறார்கள்.
வில்லன் எம்என் நம்பியார் செய்யும் சதியால் ரங்காராவுக்கு தூக்கு தண்டனை கிடைக்கிறது. அவரைக் காப்பாற்ற சிவாஜி போராடுகிறார். இறுதியில் குடும்பம் எப்படி ஒன்று சேர்கிறது என்பதுதான் அன்னை இல்லம் படத்தின் கதை. கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எல்லாமே இந்த படத்தில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் நாகேஷ் காமெடி ரோலில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவர் திக்குவாய் பாதிப்பு கொண்டவராக நடித்தார். திக்குவாய் பாதிப்பு உள்ளவர்களை கிண்டல் செய்வது போல இந்த படத்தில் அந்த காட்சிகள் அமைந்துவிட்டது. அன்றைக்கு தணிக்கை குழுவில் இருந்த உறுப்பினர்களில் ஒருவருக்கும் இந்த திக்குவாய் பாதிப்பு இருந்துள்ளது. அானால் படத்தைப் பார்த்து அவர் மிகவும் மன வேதனை அடைந்துள்ளார். அதனால் நாகேஷ் நடித்த காட்சிகள் மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வது போல் உள்ளது.
எனவே அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நடிகர் நாகேஷ் தணிக்கை குழு முன்பு நேரில் வந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சென்சார் போர்டு கண்டிஷனாக கூறிவிட்டது. அதன்பிறகு நடிகர் நாகேஷ் எந்த ஈகோவும் பார்க்காமல் சென்சார் போர்டு அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த படம் ரிலீஸாகி உள்ளது.





