சின்னத்திரையில் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் இயக்குனர் நலன் குமாரசாமி. குறும்படங்களை மிக சுவாரசியமாக அவர் கொடுத்ததன் மூலம் நடுவர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தார். அங்கிருந்து வெள்ளித்திரைக்கு செல்வதற்கு சரியான நேரத்திற்காக காத்திருந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என அனைவருக்கும் ஒரு மிகச் சிறந்த என்ட்ரியை சூது கவ்வும் திரைப்படம் கொடுத்தது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு, அப்படி ஒரு கதையம்சத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்றே தான் கூற வேண்டும்.
அந்த அளவுக்கு இதுவரை சொல்லாத கதையை ரசிகர்களுக்கு கொண்டு வந்து அதில் காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு கொடுத்து அசர வைத்தார் இயக்குனர் நலன் குமாரசாமி. இப்போது வரை சூது கவ்வும் திரைப்படத்தை பார்ப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் பலரது மத்தியிலும் ரீச் ஆனது.
இதற்குப் பிறகு ஒரு சிறிய இடைவேளை விட்ட அவர், விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். கொரியன் படத்தின் கதையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபஸ்டின் இருவரும் போட்டி போட்டு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஒரு மெல்லிய காதல் கதையை எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் ஒரு தெளிந்த நீரோடை போல நகைச்சுவையை அதற்குள் புகுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நலன் குமாரசாமி. இந்த திரைப்படம் வந்த புதிதில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கார்த்தியை வைத்து அவர் வாத்தியார் என்ற படத்தை எடுத்திருக்கிறார்.
இதில் கார்த்தியின் தாத்தாவாக ராஜ்கிரணும், படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்திருக்கிறார்கள். இந்த படம் குறித்து பல்வேறு அப்டேட்களை நலன் குமாரசாமி வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படம், 90களில் வெளிவந்த மசாலா திரைப்படங்களை பறைசாற்றுவதாக இருக்கும். எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக அமையும். படத்தில் காவலராக கார்த்தி நடித்திருக்கிறார். நான் எட்டு ஆண்டுகளாக படம் எடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் படத்திற்காக காத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று பேசி இருக்கிறார்.





