நாசர் தமிழ் சினிமாவின் மிக செல்வாக்கு மிக்க நடிகர் ஆவார். அவர் ஒரு கவிஞரை சிபாரிசு செய்து ஒரு கடிதம் அனுப்ப, அந்த கடிதம் திரும்ப இவருக்கே வந்திருக்கிறது. அந்த சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
இயக்குனர் லிங்குசாமி இயக்கிய பல திரைப்படங்களுக்கு வசன கர்த்தாவாக இருந்தவர் பிருந்தா சாரதி. இவர் லிங்குசாமி படித்த கல்லூரியில் அவருக்கு சீனியராக இருந்தவர். இவர் வசன கர்த்தாவாக ஆவதற்கு முன்பு சினிமாவில் எப்படியாவது இயக்குனராக ஆகவிட வேண்டும் என்ற நோக்கத்தில் யாரிடமாவது உதவி இயக்குனராக சேர வேண்டும் என பல இயக்குனர்களிடம் அலைந்துகொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் போக ஒரு சினிமா பத்திரிக்கையில் பணியாற்றினார். அப்போது அந்த பத்திரிக்கைக்காக பல நடிகர்களை பேட்டிகண்டார். அப்படி ஒரு சமயத்தில்தான் நடிகர் நாசரை பேட்டி கண்டிருக்கிறார்.
அப்போது நடிகர் நாசரிடம் தான் எழுதிய கவிதை தொகுப்பு ஒன்றை கொடுத்த பிருந்தா சாரதி, “எனக்கு உதவி இயக்குனராக சேர வேண்டும் என விருப்பம். உங்கள் நண்பரான இயக்குனர் செல்வா ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராமே. அவரிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்துவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு நாசரும் சரி என்று ஒரு சிபாரிசு கடிதம் ஒன்றை எழுதினாராம். அதில், “இந்த கடிதத்தை கொண்டு வரும் பிருந்தா சாரதி ஒரு நல்ல இலக்கியவாதி. நல்ல உழைப்பாளி. இவரை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்” என எழுதியிருந்தது.
நாசர் கொடுத்த அந்த சிபாரிசு கடிதத்தை இயக்குனர் செல்வாவிடம் சென்று தந்திருக்கிறார் பிருந்தா சாரதி. அதை பார்த்த இயக்குனர் செல்வா ஒரு பதில் கடிதம் எழுதிக்கொடுத்தாராம். அதாவது, “இந்த கடிதத்தை கொண்டு வரும் பிருந்தா சாரதி, எனக்கும் தெரிந்தவர் இன்று முதல். அவரை ஒரு நல்ல உழைப்பாளி என்று நம்புகிறேன். ஆதலால் நீயே வைத்துக்கொள்ளலாமே” என்று எழுதிக்கொடுத்தாராம்.
இயக்குனர் செல்வா எழுதிய அந்த கடிதத்தை திரும்ப நாசரிடம் சென்று தந்திருக்கிறார். “நாசர் ஒரு நடிகர்தானே, அவரிடம் எப்படி உதவி இயக்குனராக சேர்வது. அவர் எதுவும் படம் இயக்கப் போகிறாரா என்ன?” என்று பிருந்தா சாரதி எண்ணினாராம். அது உண்மைதான் என்பது சில நிமிடங்களில் தெரிய வந்திருக்கிறது.
அந்த கடிதத்தை படித்துப் பார்த்த நாசர், “சரி, நீ என்னிடமே சேர்ந்துக்கொள்” என்று கூறினாராம். அப்போதுதான் அவருக்கு தெரிந்ததாம், நாசர் ஒரு படத்தை இயக்கப்போகிறார் என்று. அவ்வாறுதான் நாசர் இயக்கிய முதல் படமான “அவதாரம்” திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் பிருந்தா சாரதி.





