கடந்த 2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் நடிகர் தனுஷ் நடித்த படங்களுக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகருக்கான நடுவர் குழுவின் சிறப்பு விருதும் கேப்டன் மில்லர் படத்துக்கு சமூக மாற்றத்திற்கான சிறந்த படம் விருதும் சிறந்த தமிழ் படத்திற்காக அவர் இயக்கி நடித்த ராயன் படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதற்காக நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்காக தேசிய விருது பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நடுவர் குழுவுக்கும் ரசிகர்களுக்கும் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
இது ஒரு நடிகராக எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது ஆகும். கேப்டன் மில்லர் படத்திற்காக இந்த அங்கீகாரம் எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் இது இன்று வரை எனது மிகச் சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்புகிறேன். இந்த அங்கீகாரத்தை பெறுவது மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது.
முதல் முறை என்பது எப்போதுமே மறக்க முடியாதது. ராயன் படத்திற்காக ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருதை வென்றது நான் என்றும் போற்றும் ஒரு ஆசீர்வாதமாகும். நான் எப்போதும் சொல்வது போல் எண்ணம் போல் வாழ்க்கை என்று நடிகர் தனுஷ் அதில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படத்துக்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், 72 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருது வென்ற எனது அன்புக்குரிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த பின்னணி இசைக்காக விருது பெற்ற பெருமை சேர்த்த ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் சிறந்த படத்தொகுப்புக்கான விருது பெற்ற கலைவாணன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும் தேசிய விருதுகளை வென்றுள்ள நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அனல் அரசு உள்ளிட்ட கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். அமரன் படம் மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பயோபிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.





