போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி திரைப்படத்துடன் வெளியான அந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதன்பிறகு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனது முந்தைய திரைப்படத்தின் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கலகலப்பான திரைக்கதையை அவர் அமைக்க அந்த திரைப்படம் வாகை சூடியது.
இதன் சூட்டிங் போதே நயன்தாராவை அவர் காதல் கொள்ள, இருவரும் பின்னாளில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவனுக்கு மிகப்பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனத்தை பெற்றன.
இதன் பிறகு அஜித்தை வைத்து அவர் படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனது. இப்படியான சூழலில் விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகவே இல்லை.
இந்நிலையில் அவர் நீண்ட காலமாக எழுதி வைத்திருக்கும் எல்ஐசி திரைப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப் போவதாகவும், இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திரைப்படத்திற்குள் வந்தார் லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அதேபோல், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக வருகிறார். கோவை சுற்றுவட்டார பகுதியில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்திலேயே ஏன் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. இப்படியான சூழலில் அவர் படத்தில் இருந்து விலகி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது அவர் கேட்ட தொகையை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் அவர் விலகி இருக்கிறாராம். இருப்பினும் கணவர் இயக்கும் திரைப்படத்திலேயே நயன்தாரா சம்பளம் விஷயத்தில் வெளியேறி இருப்பது திரைத்துறையில் பேசு பொருளாகி உள்ளது.





