நயன்தாரா தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியானது. அவர் முதல்முறையாக இந்தி திரையுலகில் அறிமுகம் ஆகி இருந்தார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் எட்டியது. கதாநாயகியாக நயன்தாரா நடித்தாலும் படத்தில் தீபிகா படுகோனுக்கே அதிக வாய்ப்பு இருந்ததாக அப்போது பேசப்பட்டது.
இதேபோல் ஜெயம் ரவியுடன் இறைவன் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், படுதோல்வியை சந்தித்தது. இதன் பிறகு வெளியான அன்னபூரணி திரைப்படமும் நயன்தாராவுக்கு சர்ச்சையை பரிசாக கொடுத்தது. படத்தில் பிராமண சமூகத்தை இழிவு படுத்தி இருப்பதாக மகாராஷ்டிரா வரை விவகாரம் பற்றி எரிந்தது.
இதனால் மன்னிப்பு கூறினார் நயன்தாரா. அதில் ஜெய் ஸ்ரீ ராம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியாகவே இருப்பதால், அடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் உழைத்து வருகிறார்.
இதில் தற்போது யோகி பாபுவுடன் அவர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் மண்ணாங்கட்டி. 1960களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படம் முழுக்க முழுக்க கொடைக்கானல் பகுதியில் சூட்டிங் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, டெஸ்ட் என்னும் படத்திலும் நயன்தாரா நடித்திருக்கிறார்.
இதில் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கும் இந்த திரைப்படத்தில், மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அனேகமாக இந்த ஆண்டு இறுதியிலேயே இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் நயன்தாரா தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இதனை எடுக்கிறது. சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் தான் இந்த திரைப்படத்திற்கு கதை எழுதுகிறார். ஏற்கனவே நயன்தாராவை வைத்து ஐரா என்னும் தோல்வி திரைப்படத்தை கொடுத்த சர்ஜுன், மீண்டும் இந்த படத்தின் மூலம் நடிகையை வைத்து இயக்குகிறார். விரைவில் படத்திற்கான அடுத்த கட்ட அறிவிப்புகள் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





