தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடி சேர்ந்தார் நயன்தாரா. தொடர்ந்து விஜய் அஜித் என முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர் முன்னணி நடிகையாக முன்னேறினார்.
நயன்தாராவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது திரைப்படம் எதுவென்றால் பில்லா யாரடி நீ மோகினி ஆகிய படங்களை கூறலாம். அதிலும் பில்லா திரைப்படத்தில் மிகவும் ஸ்டைலிசாக நடித்திருந்த அவர், நீச்சல் உடையில் காட்சியளித்து ரசிகர்களை கிறங்க அடித்தார். இதன் பிறகு யாரடி நீ மோகினி திரைப்படத்தில், கீர்த்தியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இதனிடையே பல்வேறு சர்ச்சைகளால் சிறிது காலம் திரையுலகில் இருந்து விலகி இருந்த நயன்தாரா ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு நானும் ரவுடிதான் திரைப்படத்தில் காதம்பரியாக அவர் நடிக்க, ரசிகர்களின் கனவு கன்னி ஆனார் நயன்.
இதையடுத்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தேடி தேடி அவர் நடிக்க ஆரம்பித்தார். கோலமாவு கோகிலா அறம் மாயா என அவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை பெற லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டார் நயன்தாரா. இதன் நடுவே தனது காதலர் விக்னேஷ் சிவனை அவர் கரம் பிடித்தார். இந்த தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் மிகப்பெரியதாக ஆர்வம் காட்டாத நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை விக்கி என்பவர் இயக்குகிறார். யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் உள்ளிட்டவரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் கொடைக்கானலில் தொடங்கியது.
1960களில் நடைபெறுவதுபோல இதன் கதை எழுதப்பட்டுள்ளது. கொடைக்கானலை அடுத்த தாண்டிக்குடியில் ஏலக்காய் தோட்டத்திற்கு நடுவே படப்பிடிப்பு நடத்தப்படும் நிலையில் அங்கு வரமாட்டேன் என்று நயன்தாரா கூறிவிட்டாராம். இதனால் நடிகையை தவிர்த்த மற்ற போர்ஷன்களை இப்போது இயக்கி வருகிறார்கள். மேலும் வேறு வழி இல்லாமல் அதே ஏலக்காய் தோட்டத்தை, சென்னையில் ஷெட் போட்டு எடுக்க தயாரிப்பாளரும் சம்மதித்து விட்டாராம். இதனிடையே கதையை கேட்டு தானே நயன்தாரா இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார் பிறகு ஏன் இவ்வாறு குடைச்சல் கொடுக்கிறார் என்று படப்பிடிப்பில் பலரும் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.





