அப்போது இப்போது என்று விஜய்யின் கடைசி படத்திற்கான வேலைகளும் தொடங்க இருக்கிறது. வரும் ஐந்தாம் தேதி, முதலில் படத்திற்கான பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். எச் வினோத் இந்த திரைப்படத்தை இயக்குவது நாம் அனைவரும் அறிந்ததே. தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கலக்கிய கே வி என் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று என தரமான இரண்டு திரைப்படங்களை கொடுத்தவர் எச் வினோத். பிறகு அஜித் உடன் இணைந்து மூன்று படங்களை இயக்கினார். இதில் நேர்கொண்ட பார்வை ஓரளவு வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
பிறகு அவர் எடுத்த துணிவு திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று, வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இருந்தாலும் இது சாதாரண படம் போல் இருப்பதாகவும், சதுரங்க வேட்டை தீரன் அளவுக்கு போல் அந்த திரைப்படம் இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படியான சூழலில் தான் தனது கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்திடம் நம்பி கொடுத்திருக்கிறார் விஜய்.
வினோத் இந்த கதையை முந்தைய காலங்களிலேயே நடிகர் அஜித்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. பிறகு அங்கிருந்து விஜய் சேதுபதிக்கு சென்ற கதை கடைசியாக கமல்ஹாசனுக்கு போயிருக்கிறது. அவரும் பிடித்து போய் இருவரும் இணைவதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் திடீரென அது சூட்டிங் செல்லாமலேயே நின்று விட்டது.
இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. தற்போது இந்த கதையை தான் வினோத் விஜய்யை வைத்து எடுக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு போஸ்டர் வெளியாகும் போது கையில் தீப்பந்தத்தை ஏற்றுவது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் இது அரசியல் கலந்த கமர்சியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் வில்லனாக பாபி தியோல் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதனை தயாரிப்பு நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தொடர்ந்து பூஜா ஹெக்டே படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே, விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இதேபோல் மலையாள நடிகை மமிதா பைஜுவும் இந்தத் திரைப்படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.





