கடந்த வாரத்தில் வெளியான கங்குவா படம் குறித்த விமர்சனம் நெருப்பாய் பற்றி எரிந்த நிலையில், திடீரென நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் குறித்து வெளியிட்ட அறிக்கையால் கங்குவா மறைந்து போய் இந்த விவகாரம் பெரிய அளவில் வைரலானது. அதுவும் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு கீழ்த்தரமான செயலை செய்துவிட்டதாக தனுஷ் மீது பழிசுமத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா.
நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா நடித்த போது இயக்குனருக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டு, பின் 7 ஆண்டுகள் தீவிரமாக காதலித்த நிலையில் பிறகு இருவரும் கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.
இதையடுத்து தங்களது திருமண வீடியோவுடன் ஆவணப்படமாக வெளியிட திட்டமிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதற்காக பல கோடிகள் விலை பேசியும் விற்றனர். ஆனால் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலில் தீவிரமாக இருந்ததால், ஷூட்டிங் கடுமையாக பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய், தயாரிப்பாளர் தனுஷூக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் நயன்தாரா, விக்கியுடன் தனுஷூக்கு மனஸ்தாபம் நீடித்தது.
இந்த சூழலில், தங்களது திருமண வீடியோ அடங்கிய ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திக்கொள்ள நயன்தாரா தரப்பில், என்ஓசி கேட்ட நிலையில், தனுஷ் தர மறுத்துவிட்டார். ஆனால் அதையும் மீறி அந்த வீடியோ காட்சிகளை தனது ஆவணப்படத்தில் நயன்தாரா பயன்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ரூ. 10 கோடி நஷ்ட ஈடும் கேட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம், இந்த மனுவுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சார்பில் அவர்களது வக்கீல் அளித்த பதிலில், நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. நாங்கள் விதிமீறலில் ஈடுபடவும் இல்லை.
பதிப்புரிமை மீறல் எதுவும் இதில் நடக்கவில்லை. இதில் தனிப்பட்ட காட்சிகள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு மீறல் அல்ல என தெரிவித்துள்ளார். இதை அடுத்து வருகிற டிசம்பர் 2ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஆவணப்படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இப்படி ஒரு அக்கப்போர் தேவையா, என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுவும் ஆவணப்படத்தில் விதிமீறலே இல்லை என்றும் நயன்தாரா கூறியிருப்பது ரசிகர்களை தலைசுற்ற வைத்துள்ளது.





