தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் கேரளாவில் லோக்கல் டிவி சேனல் ஒன்றில் காம்பியராக இருந்தவர் நயன்தாரா. மலையாளத்தில் மனசிகாரே என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அவரை தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி ஐயா படத்தில் அறிமுகப்படுத்தினார்.
முதல் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். ரஜினி விஜய் அஜீத்குமார் சிம்பு தனுஷ் விக்ரம் சூர்யா போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.
சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் ஒரு கட்டத்தில் அவர்களுடன் பிரேக்கப் ஏற்பட்டது. பிறகு நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது. 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்துக்கு பின் வாடகைத் தாய் மூலம் உயிர் உலக் என்ற 2 பிள்ளைகளுக்கு தாயான நயன்தாரா, இப்போதும் தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக நடித்து வருகிறார். அவருக்கு பல படங்கள் தொடர்ந்து கமிட் ஆகி வருகின்றன. ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
மலையாளத்தில் ஏற்கனவே மெகா ஸ்டார் நடிகர் மம்முட்டியுடன் பாஸ்கர் தி ராஸ்கல் புதிய நியமம் ஆகிய படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். இப்போது டேக் ஆப், மாலிக் ஆகிய படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன், மம்முட்டி நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு தற்காலிகமாக எம்எம்எம்எம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக 3வது முறையாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
எம்எம்எம்எம் என்ற இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பகத் பாசில் குஞ்சாக்கோ போபன் ரேவதி ராஜீவ் மேனன் தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மம்முட்டி மோகன்லால் பகத்பாசில் நயன்தாரா என ஸ்டார் நடிகர்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்திருக்கிறது.





