நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படம் கடைசியாக வெளியானது. கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியான ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாத போதும் வணிக ரீதியாக இந்த படம் பெரிய வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 235 கோடிக்கு மேல் வசூலித்து நல்ல லாபம் தந்த படமாக கூறப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 45 வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் பெயர் கருப்பு. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் இப்போது அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்குதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
கருப்பு படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா இப்போது நடித்து வருகிறார். இது சூர்யாவின் 46வது படமாகும். தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் லக்கி பாஸ்கர், சங்கராந்தி வஸ்துனம் போன்ற படங்களை இயக்கியவர் வெங்கி அட்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடித்து வரும் இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக ஆவேசம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கம் சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடிகர் சூர்யா போலீஸ் கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். சூர்யா 47 என்ற இந்த படத்துக்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா 47 படத்தின் நாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
மலையாள நடிகர் பகத் ஃபாசிலின் மனைவிதான் நஸ்ரியா. இவர் ஏற்கனவே தமிழில் நையாண்டி ராஜா ராணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். நடிகர் பகத் ஃபாசில் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் அதிக வரவேற்பைப் பெற்ற நடிகர். வேலைக்காரன் விக்ரம் வேட்டையன் மாமன்னன் மாரீசன் என தமிழில் அவர் நடித்திருக்கிறார். மலையாள நடிகர் பகத் ஃபாசிலின் மனைவி நஸ்ரியா, நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





