கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு டார்க் காமெடி ஜானரில் வௌியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வினய்குமார், இளவரசு, விஜே அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான டாக்டர் படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதன் பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கினார்.
ஆனால் இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்த படமாக நெல்சனை ரசிகர்கள் விமர்சித்தனர். விஜய் பூஜா ஹெக்டே விடிவி கணேஷ் சுஜாதா பாபு யோகிபாபு செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்த பீஸ்ட் படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்று விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியது.
எனினும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பீஸ்ட் படம் லாபகரமான படமாக இருந்ததால், ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். வழக்கமான போலீஸ், வில்லன் கதை என்றாலும் அனிருத் இசை படத்தை வேற லெவலில் வெற்றி பெற வைத்தது. குறிப்பாக தமன்னாவின் காவலய்யா குத்தாட்ட பாடல் படத்துக்கு பக்கபலமாக இருந்தது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் படத்திலும், வேட்டையன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கூலி படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் அடுத்த படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்க கமிட் ஆகியுள்ளார். சில கதைகளை நெல்சன், ஜூனியர் என்டிஆரிடம் சொல்லி ஓகே வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தை தயாரிக்க 2 தயாரிப்பு நிறுவனங்கள் கடும் போட்டியிடுகின்றன. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.





