கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், நீங்கள் கேட்டவை, தீச்சட்டி கோவிந்தன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர். அவரது ஒரே மகன்தான் நடிகர் பிரசாந்த். 1990களில் வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து இயக்குனர் பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்திலும், அதன்பிறகு மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், தமிழ், வின்னர் என பல படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்.
தொடர்ந்து, தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக வலம் வந்த பிரசாந்த் விரும்புகிறேன், பார்த்தேன் ரசித்தேன் என நடித்த பிரசாந்த், சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதில் போதிய ஆர்வம் காட்டாமல் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே கைவிட்டு விட்டார்.
அதன்பிறகு தனது தந்தைக்கு சொந்தமான பிஸினஸ்களை கவனித்து வந்த பிரசாந்த், இப்போது மீண்டும் தனது செகன்ட் இன்னிங்ஸை தமிழ் சினிமாவில் துவங்கி விட்டார். இதில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான தி கோட் படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதில் விசில்போடு பாடலில் பிரசாந்த் ஆடிய நடனம், பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, வரவேற்பை பெற்றது.
இப்போது அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் வெளியான அந்தகன் படமும் பிரசாந்த் நடிப்புக்கு கம்பேக் கொடுத்திருக்கிறது. கண் பார்வையற்ற கேரக்டரில் பிரசாந்த் நடிப்பு, சிம்ரன் மற்றும் பிரியா ஆனந்த், கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு, கார்த்திக், ஊர்வசி என பலரது நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த படங்களை இயக்க லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் திலீப்குமார் ஆகியோரை குறிவைத்துள்ளார் பிரசாந்த். அதிலும் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தில் கேமியோ ரோலில் பிரசாந்த் நடிக்கவும் அதிக வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஒருவேளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அழைத்தால், ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரசாந்த் தாராளமாக முன்வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





