தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கியவர் நடிகர் விஜயகாந்த். கடந்த 1980, 90களில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர். ரஜினி, கமலுக்கு அடுத்தப்படியாக விஜயகாந்த் 3வது நிலையில் இருந்தார். ஆனால் திரைத்துறை ஆளுமையில், அவர்களை விட முன்னிலையில் இருந்தவர் விஜயகாந்த்.
அதனால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1999ம் ஆண்டு 2004ம் ஆண்டு வரை அவர் பொறுப்பு வகித்த காலகட்டத்தில், நடிகர் சங்க கடனை அடைக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். துணிச்சலாக செயல்பட்டு ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களையும் துபாய், சிங்கப்பூர், மலேசியா என அழைத்துச் சென்று நட்சத்திர கலை இரவு நடத்தி, அதில் கிடைத்த வருவாயை கொண்டு சங்க கடனை அடைத்தார்.
அதுமட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக, திரைத்துறையில் அந்தந்த காலகட்டங்களில் ஏற்பட்ட பல பிரச்னைகளை சுமூகமாக தீர்த்து வைத்தார். எந்த பிரச்னை என்றாலும், என்ன உதவி என்றாலும் எல்லோருக்கும் அதை சரிசெய்து கொடுத்தார். சக நடிகர்களுக்கு என்ன மாதிரியான சிரமங்கள் இருந்தாலும், அதை அறிந்தால் அவர்கள் கேட்காமலேயே அந்த உதவியை தானாக முன்வந்து செய்பவர்.
அதே போல் தேமுதிக என்ற கட்சியை கடந்த 2005ம் ஆண்டி துவங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். திமுகவை பின்னுக்கு தள்ளி, 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். திமுக, அதிமுக இரு கட்சிகளையும் பொதுவெளியில் சகட்டு மேனிக்கு விமர்சித்து பேசியவர். ஆனால் உண்மைகளை பேசினார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல் உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் தொடர்ந்து பலவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் உடல் நலம் குணமடையவில்லை. ஒரு கட்டத்தில் நினைவுத்திறன் குறைந்து பேச முடியாமலும் அவர் இருந்தார். கடந்த 3 ஆண்டுகளாக நடக்கவும் சிரமப்பட்ட அவர் படுத்த படுக்கையாகி விட்டார். அடிக்கடி மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு என மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் மறைவை அறிந்த தமிழக மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவரது இறுதி ஊர்வலத்தில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதையடுத்து, மத்திய அரசு நேற்று 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்த நிலையில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்துக்கு, பத்மபூஷன் விருது அறிவித்து கௌரவித்துள்ளது. கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





