தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வெளியாகும் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் இதுபோன்ற விசேஷ நாட்களில் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடும் மக்கள், தங்களது சந்தோஷங்களின் ஒரு பகுதியாக குடும்பத்துடன் நண்பர்களுடன் சினிமா தியேட்டர்களுக்கு படையெடுப்பது வழக்கமாக உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையன்று அஜீத்குமார் நடித்த துணிவு படம் வெளியானது. இதையடுத்து சரியாக 2 ஆண்டுகள் கழித்து அதே பொங்கல் பண்டிகை நாளில் வருகிற 2025ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி குட்பேட் அக்லி படம் ரிலீஸாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு முந்தைய படமான விடாமுயற்சி எப்போது ரிலீஸ் என்று இன்னும் உறுதியாகவில்லை.
அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம் வருகிற தைப் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட அவரது கேரக்டரில் வாய் பேசாத கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஷங்கர் இயக்கிய படங்களில் இந்தியன் 2 படம் போல மிக மோசமான விமர்சனங்களை சந்தித்த படம் எதுவுமே கிடையாது. அதுவும் நாயகனாக கமல் நடித்த இந்த படம் இவ்வளவு மோசமான தோல்வியை சந்திக்கும் என்று படத்தின் இயக்குனர் ஷங்கர் எதிர்பார்க்கவே இல்லை.
அதனால் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை இயக்கிய இயக்குனர் ஷங்கர், இந்த படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஷங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இன்றைய நிலவரப்படி பொங்கல் பண்டிகை களத்தில் கேம் சேஞ்சர், வணங்கான், குட் பேட் அக்லி என்ற 3 பெரிய படங்கள் குதிக்கின்றன. அஜீத்குமார், அருண் விஜய், ராம்சரண் என்ற 3 ஹீரோக்களில், வெற்றி மாலை யாருக்கு என்பதில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன், ஷங்கர், பாலா என 3 இயக்குனர்களில் யாருடைய படத்தை ரசிகர்கள் கொண்டாடப் போகிறார்கள் என்ற சஸ்பென்ஸ்சும் நீடிக்கிறது.





