தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று இப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்து வருகிறார்.
முன்னாள் நடிகர் மற்றும் இன்றைய தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆறு மாதங்களாக சென்சார் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் முடங்கி இருந்த நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் கடந்த ஜூலை 23ம் தேதி ரிலீஸ் என தகவல் வெளியானது. இதையடுத்து தனது அப்பா விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்காக அவரது மகன் ஜேசன் சஞ்சய் அவர் முதன் முறையாக இயக்கிய சிக்மா படத்தின் ரிலீஸ்சை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 2ம் தேதி சிக்மா படம் ரிலீஸ் ஆகும் என லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம் அன்புதாசன் யோக் ஜெபி சம்பத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.
கடந்த ஜூலை 31ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் 23ம் தேதி ஆனதால் சிக்மா படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 18ம் தேதி சிக்மா படம் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அக்டோபர் 2ம் தேதி சிக்மா படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் நடிகர் யஷ் நடித்த டாக்சிக் படம் வெளிவருகிறது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி நடிகர் சூரி நடித்த மண்டாடி படம் வெளியாக உள்ளது. இதன் காரணமாக போதிய தியேட்டர்கள், நான் தியேட்டரிக்கல் வியாபாரம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு சிக்மா படம் ரிலீஸ் அக்டோபர் 2ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. எனினும் காந்தி ஜெயந்தி தினத்தில் இந்த படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.





