நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி அஜர்பைஜானில் துவங்கியது. பிறகு சில காரணங்களால் அடிக்கடி படப்பிடிப்பு தடைபட்டது. பிறகு அவ்வப்போது ஷூட்டிங் நடந்தது.
இப்படியே சில மாதங்கள் படப்பிடிப்பு நடப்பதும், சில மாதங்கள் தடைபடுவதும் என 15 மாதங்களாக படப்பிடிப்பு ஒரு வழியாக நடந்து முடிந்து ஷூட்டிங் நிறைவடைந்தது. கடைசியாக டிசம்பர் மாத இறுதியில் அஜீத்குமார் திரிஷா நடித்த பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டது. இதில் வெள்ளை தலைமுடி, வெள்ளை தாடி மீசை இன்றி ஸ்மார்ட் லுக்கில் அஜீத்குமார் காணப்பட்டார்.
இந்த சூழலில் விடாமுயற்சி பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது, ரசிகர்களை கொண்டாட்டமடைய செய்தது. ஏனெனில் கடைசியாக வெளியான அஜீத்குமார் படம் துணிவு, 2023ம் ஆண்டில் பொங்கலுக்கு தான் வெளியானது. அதனால் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் என்ற தகவல் ஏகே ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.
ஆனால் டிசம்பர் 31ம் தேதி இரவு, ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டுகளை தெரிவித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை. படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்ற பெரிய குண்டை போட்டது. ரிலீஸ் தேதியையும் அறிவிக்கவில்லை.
இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் கடும் விரக்தியடைந்தனர். ஒரு உச்ச நடிகர் படத்தை இப்படிதான் ரிலீஸ் செய்வதாக சொல்லி கடைசி நேரத்தில் ஏமாற்றுவீர்களா என்றும் கேள்வி எழுப்பினர். பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுத்த படம்தான் விடாமுயற்சி என்பதால் அந்த பஞ்சாயத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவில்லை என்ற தகவலும் வெளியானது.
இந்த சூழலில் இன்று மாலை விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. இதில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி விடாமுயற்சி படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலும் மாற்றம் பண்ணாமல் இருந்தால் சரிதான் என்கின்றனர் ரசிகர்கள்.





