தமிழ் சினிமாவில் மட்டுன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஹீரோ நடிகர்கள் பெறுகிய சம்பளத்தை பார்க்கும்போது, மலைப்பாக இருக்கிறது. அதுவும் கமலுக்கு ஒரு படத்துக்கு ரூ. 150 கோடி சம்பளம், விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம், ரஜினிக்கு ரூ. 120 கோடி சம்பளம் என்பதெல்லாம் இது கனவா, நனவா என நினைக்கும்படியாக பிரமிப்பாக இருக்கிறது.
அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி போன்றவர்களின் சம்பளம் சில லட்சங்களை கூட தாண்டவில்லை. அதுவும் 10 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற ஹீரோக்கள் அந்த காலகட்டத்தில் இல்லை. ரஜினி, கமல் சம்பளம் கூட துவக்கத்தில் ஆயிரங்களில்தான் இருந்தது. மூன்று முடிச்சு படத்தில் கமல் சம்பளம் ரூ. 30 ஆயிரம், ஸ்ரீதேவி சம்பளம் ரூ. 5 ஆயிரம், ரஜினிகாந்த் சம்பளம் ரூ. 2 ஆயிரம்தான். இதை மறைந்த ஸ்ரீதேவிேயே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
ஆனால் இன்று ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் போன்றவர்களின் சம்பளம் 100 கோடி ரூபாய்களை தாண்டியிருக்கிறது என்றால், யோகிபாபு, சந்தானம், சூரி போன்றவர்களின் சம்பளமும் 3, 4 கோடி ரூபாய் என எகிறுகிறது. வடிவேலு பிஸியாக இருந்த போது ஒருநாள் சம்பளம் ரூ. 5 லட்சம். மாதம் ரூ. 1.5 கோடி என்பதாக உள்ளது. நயன்தாரா சம்பளம் ரூ. 12 கோடி, திரிஷா சம்பளம் ரூ. 10 கோடி ஆக உள்ளது. லவ்டுடே என்ற ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் ரூ. 15 கோடியாம்.
இது தமிழ் சினிமாவின் நிலையாக இருக்கிறது. அதே போல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் நடிகர்களின் சம்பளமும் பலமடங்கு கணிசமாக உயர்ந்திருக்கிறது. பிரபாஸ், ராணா, பகத்பாசில், பிருத்விராஜ், யாஷ், ஷாருக்கான், சல்மான்கான் என பலரது சம்பளமும் கேட்டவுடன் பிரமிப்பை தருகிறது. அட்லி தனது அடுத்த படத்துக்கு ரூ. 100 கோடி சம்பளம் பெற உள்ளதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.
இப்படி நூறு நூறு கோடிகளில், ஹீரோ நடிகர்கள், நடிகைகள், காமெடியன்கள், இயக்குநர்கள் சம்பளம் பெற முக்கிய காரணம் என்னவென்றால், இவர்கள் நடித்த படங்களுக்கு கிடைக்கும் டிஜிட்டல் ரைட்ஸ் ஓடிடி தளங்கள் கொடுக்க முன்வரும் விலை, சேட்டிலைட் சானல்கள் கொட்டிக்கொடுக்கும் பணம்தான். படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வரும் முன்பே, இந்த பிஸினஸ் பெரிய அளவில் நடந்து வருகிறது.
இப்போது விழித்துக்கொண்ட டிஜிட்டல் ரைட்ஸ் பெறும் ஓடிடி தளங்கள், சாட்டிலைட் சேனல்கள் இனி பெரிய ஸ்டார் நடிகர்கள், பெரிய இயக்குநர்கள், பான் இந்தியா படங்களுக்கு இனிமேல் இப்படி நூற்றுக்கணக்கான கோடிகளில் விலைக்கு வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டன. ஓடாத படங்களுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்து நஷ்டமடைய வேண்டாம் என்ற தெளிவுக்கும் வந்துவிட்டன. அதனால் இனி தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை விடவும் ஓடிடி தளங்கள், சாட்டிலைட் சேனல்கள் கோடிக்கணக்கில் புரண்ட நடிகர்கள், இயக்குநர்கள் இனி அடக்கி வாசிக்க வேண்டும். அவர்களது சம்பளமும் இனி வெகுவாக குறைந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.





