மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மம்முட்டி. அவர் 70 வயதில் கடந்தும் இப்போதும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் நிறைய படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். அவர் நடித்த சமீபத்திய மலையாள படங்கள் பிரமயுகம் களம் காவல் பேட்டரியாக் போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன.
நடிகர் மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மான். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வருகிறார். அவர் ஒரு பான் இந்தியா நடிகராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் நடித்த லக்கி பாஸ்கர் சீதாராமம் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் பூட்டான் நாட்டில் இருந்து ஆடம்பர கார்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து அந்த கார்களை விற்பனை செய்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஆபரேஷன் நும்கூர் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பூட்டான் நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கார்களை மலையாள சினிமா நடிகர் மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மான் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்த 4 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து அதிக விலைக்கு கார்களை விற்றது சுங்கத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து 6 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் துல்கர் சல்மானிடம் கொச்சியில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னிடம் பறிமுதல் செய்த கார்களை சட்டப்படி வாங்கியதாகவும் இந்த கார்கள் பூட்டான் நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்றும் அதிகாரிகளின் விசாரணையின் போது நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். ஆனால் அதை சுங்கத் துறையினர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சொகுசு கார்களை வாங்கிய உரிமையாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். துல்கர் சல்மான் பெயரில் கூடுதல் கார்கள் உள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கார்கள் எல்லாம் இப்போது எங்கு உள்ளது என்பதை கண்டறிய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





