தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் இப்போது 50வது ஆண்டை கொண்டாடி வருகிறார். கடந்த 1975ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான அவர், இப்போது 2025ம் ஆண்டில் கூலி ஜெயிலர் 2 படங்களில் நடித்து வருகிறார். 50 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்து பொன்விழா கொண்டாடுகிறார்.
எனினும் இப்போது 74 வயதாகி விட்ட நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் வரை அவரது உடல் நலம் ஒத்துழைத்தால் ஹீரோவாக நடிக்க முடியும். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் படங்களில் கேரக்டர்களை தேர்வு செய்து கெஸ்ட் ரோலில் நடித்தால் மட்டுமே எடுபடும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அதே போல் நடிகர் கமல்ஹாசனும் 70 வயதுகளை தொட்டுவிட்ட நிலையில் காதல் படங்களில் அவர் நடிக்க முடியாது. ஆக்சன் படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு அதையும் ரசிகர்களால் ஏற்க முடியாது. தவிர அவர் அரசியல்வாதியாக மாறிய பின்பு பலருக்கும் அவரை நடிகராகவும் பிடிக்காமல் போய்விட்டது. அதனால் கமல் படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவும் கிடைப்பதில்லை.
இந்த சூழலில் நடிகர் விஜயும் ஜனநாயகன் படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லி விட்டு அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட இருக்கிறார். அதனால் அவரும் சினிமா களத்தில் இல்லாத நிலையில், இருப்பது ஒரே ஒரு டாப் லெவல் நடிகர் என்றால் அது அஜீத்குமார் மட்டும்தான். இன்னும் அவர் பல ஆண்டுகளுக்கு காதல் காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ளது. ஆக்சன் படங்களிலும் நடிக்கலாம்.
இப்போது உள்ள தமிழ் சினிமா சூழலில் நடிகர் அஜீத்குமார் படங்களை இயக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும், பிரபல இயக்குனர்களும் வெகு ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் தன்னை தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டு நடிகர் அஜீத்குமார் கார் ரேஸ் பைக் ரேஸ் என விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்காமல் கடந்த ஜனவரி முதல் வருகிற அக்டோபர் வரை 8 மாதங்களுக்கு தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்க உள்ளார்.
அதன்பிறகு நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மார்ச் என 5 மாதங்கள் மட்டுமே கால்ஷீட் தரும் நடிகர் அஜீத்குமார் மீண்டும் 2026ம் ஆண்டில் ஏப்ரல் முதல் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்க உள்ளார். குட் பேட் அக்லி படம் 7 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்த நிலையில், விஜயை போலவே அஜீத்குமாரும் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருக்கிறார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டு பல மாதங்களுக்கு ஏகே கார் ஓட்டப் போவது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.





