இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர் பா. ரஞ்சித். சென்னை 600028 உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த அவர், அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படத்தை தயாரித்தது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். சந்தோஷ் நாராயணன் இசையில் இதன் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின.
அதேபோல, படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. சொல்லப்போனால் ஒரு பட்டியலின இளைஞரின் வாழ்க்கையை அவ்வளவு துல்லியமாகவும், அவர்களின் வாழ்க்கை முறையையும் மிக அழகாக காட்டி பா ரஞ்சித் அசர வைத்திருந்தார். அங்கிருந்து தொடங்கியது அவரது வெற்றி பயணம்.
தொடர்ந்து மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து காலா கபாலி ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். ஓடிடி தளத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து அவர் எடுத்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் தான் பா ரஞ்சித்திற்கு, தங்கலான் திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது. சீயான் விக்ரம் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
கோலார் தங்க வயல் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அடக்குமுறையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆனால் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி என்று கூறி அதற்கு சக்சஸ் மீட் வைத்து விட்டார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் பா ரஞ்சித், எனது படைப்புகளை ஏற்காதவர்கள் கூட தங்கலானை பார்த்துவிட்டு பாராட்டினார்கள். இதன் மூலம் இந்த படைப்பு ஏற்படுத்திய தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் கூட ஒரு மிகப்பெரிய பாலிவுட் நட்சத்திரம் என்னை செல்போனில் அழைத்து வாழ்த்தினார். தொடர்ந்து எனக்கு படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பா ரஞ்சித்தின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.





