சிவகார்த்திகேயனுக்கு தற்போது கைவசம் இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. இதில் ஒரு திரைப்படம் மதராசி. ஏ ஆர் முருகதாஸ் தான் இதன் இயக்குனர். இதன் சூட்டிங் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தொடங்கிவிட்டது. தெலுங்கின் மிக முக்கிய நிறுவனமான லட்சுமி மூவிஸ், இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.
கதாநாயகியாக ருக்மணி வசந்த் இடம் பெற்றுள்ளார். இதுபோக, துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜமால், விக்ராந்த் உள்ளிட்டோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இதன் சூட்டிங் பணிகள் கடந்த ஆண்டு முடிக்க வேண்டிய நிலையில்தான் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சல்மான் கான் இடமிருந்து முருகதாஸுக்கு அழைப்பு வந்தது.
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட முருகதாஸ், மதராசியை ஒரு ஓரமாக வைத்து விட்டு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை எடுக்க சென்றார். அவசர அவசரமாக சூட்டிங் முடிக்கப்பட்டு ரம்ஜான் பண்டிகைக்கு படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. எந்த ஒரு சுவாரசியமும் படத்தில் இல்லை என்று பலரும் கூறினார்கள்.
இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மதராசி திரைப்படம் ஆக்சன் பாணியில் உருவாகி வரும் சூழலில், முருகதாஸ் மீண்டு வர மாட்டாரா என்று அவர்கள் காத்திருக்கின்றனர். கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் இன்னும் எடுக்கப்பட வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, தனது 25வது திரைப்படமான பராசக்தியில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
சென்னையில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு காரைக்குடி சிதம்பரம் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டு இலங்கைக்கும் சென்றது. அங்கு 20 நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன் அதர்வா ஸ்ரீலிலா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது பல்வேறு காரணங்களுக்காக சூட்டிங் தடை பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் பொங்கலுக்கு படத்தை வெளியிட தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக ஓடிடி உரிமத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. netflix நிறுவனம் 45 கோடி ரூபாய்க்கு படத்தை கேட்கும் சூழலில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் 50 கோடி ரூபாய் முன் வைக்கப்படுகிறதாம். இதன் காரணமாக தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





