விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக 90 நாட்களுக்கு மேல் வீட்டுக்குள் இருந்தவர் பார்வதி. ஆனால் டிக்கெட் டூ பினாலேவுக்காக நடந்த கார் டாஸ்க்கில், சக போட்டியாளர் சாண்ட்ராவை பார்வதி உதைத்து காரை விட்டு வெளியே தள்ளினார். அவருடன் சேர்ந்துக்கொண்டு கம்ருதீனும் சாண்ட்ராவுக்கு எதிராக செயல்பட்டார்.
இந்த விவகாரத்தில் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் விஜய் சேதுபதி ரெட்கார்டு காட்டிய நிலையில் அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். துவக்கத்தில் பார்வதிக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்த நிலையில் இப்போது சாண்ட்ராவுக்கு எதிரான விமர்சனங்களும் அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் டிராமா குயின் சாண்ட்ரா என்றும் பலர் கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பார்வதி வெளியிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பார்வதி பேசியிருப்பதாவது, நான் பேச வேண்டும் பெர்பாம் பண்ண வேண்டும் என்றாலே ஒரு ஸ்பேஸ் இருக்காது. எனக்கு பிக்பாஸ் ஷோ செட் ஆகவில்லை. முதலில் ஒரு காம்பிடேசன் இருக்கும் இடத்தில் உங்களுடைய ஒர்த்தை நீங்கள் நிரூபித்து தான் ஆக வேண்டும்.
பேசும் நபருக்கு சமமாக நீங்களும் போட்டி போட்டுக்கொண்டு பேச வேண்டும். அப்போதுதான் உங்கள் திறமையை நீங்கள் காட்ட முடியும். நிறைய பேரை அவமானப்படுத்தும் விதமாக அந்த ஷோவில் நடந்திருக்கிறது. அந்த டெலிவிஷனின் பார்மேட் இப்படித்தான். ஒரு ஷோவில் யார் யார் வெளியே தெரிய வேண்டும் என்பதை ஒரு சில நபர்கள் கூட்டு சேர்ந்து முடிவு செய்தார்கள் என்றால் அங்கு ஜனநாயகம் இல்லை.
எனக்கு ஜாலியா காமெடி பண்ணிட்டெல்லாம் இருக்க தெரியாது. அதனால்தான் நமக்கு ரியாலிட்டி ஷோ செட் ஆவதில்லை. என் வீட்டில் உண்மையை பேச வேண்டும். தைரியமாக பேச வேண்டும் என்று தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்வதி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு பார்வதியின் கருத்துகளுக்கு ஒரு சிலர் பாராட்டுகளும் பலர் எதிர்மறை கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். விஜே பார்வதி பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல. எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பிரச்னை செய்து விட்டு வருவதுதான் அவரது பாலிசி என்றும் ஒரு சில நெட்டிசன்கள் அதில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ரெட்கார்டு காட்டி வெளியே துரத்தியும் இன்னுமே பார்வதி திருந்தலையா என்றும் ஒரு சிலர் கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.





