எந்த ஒரு சூழலையும் அதன் இயல்பு மாறாமலும், கண்களுக்கு உறுத்தாத வகையிலும் கச்சிதமாக காட்சிப்படுத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பவர் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். 1985ம் ஆண்டு வெளியான மீண்டும் ஒரு காதல் கதை எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்னும் பெயரை பெற்றார் பிசி ஸ்ரீராம். அந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலருக்கும் அதில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சியும் யார் இந்த ஒளிப்பதிவாளர் என்ற கேள்வியை எழுப்பியது.

ஒரு சினிமா என்றால் அதில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் இவர்களைப் பற்றி மட்டும் தான் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த வேளையில், முதல்முறையாக ஒளிப்பதிவாளர் பற்றிய கருத்து தமிழ் சினிமாவில் மேலோங்கியது. இதற்கு முழு காரணமாக இருந்த பிசி ஸ்ரீராம், மணிரத்னம் படங்களில் தனது புதுமையை புகுத்தி ரசிகர்களுக்கு காட்சி விருந்தளித்தார்.
பி சி ஸ்ரீராமின் கடின உழைப்பு அவரை மிக விரைவாக விருதுகளை வெல்ல வைத்தது. நாயகன் திரைப்படத்தில் பம்பாய் நகரம் பிரம்மாண்ட செட்டு போட்டு எடுக்கப்பட்டிருந்தாலும், அதை தத்ரூபமான வகையில் காட்சிப்படுத்தி சபாஷ் போட வைத்த பிசி ஸ்ரீராம், முதல்முறையாக தேசிய விருதை பெற்றார்.

அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா என ஒவ்வொரு திரைப்படமும் பிசி ஸ்ரீராமின் உழைப்பை கூற, தேவர் மகனில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அசத்தினார். படம் முழுக்க வீசும் கிராமிய மணத்தை தனது கேமரா மூலம் ரசிகர்களுக்கு கடத்திய அவர், சிறந்த ஒளிப்பதிவாளராக வலம் வந்தார். குருதிப்புனல் திரைப்படத்தில் அவர் போட்ட உழைப்பு, பிசி ஸ்ரீராம் பெயரை ஆஸ்கர் வரை எடுத்துச் சென்றது. அந்த ஒரு படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் சேர்க்கப்பட்டார் பிசி ஸ்ரீராம்.
தொடர்ந்து முகம், காதலர் தினம், முகவரி, அலைபாயுதே, குஷி, கண்ட நாள் முதல், வரலாறு தாம் தூம், ஓ காதல் கண்மணி, ரெமோ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர், தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். 96 எனும் காதல் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரேம்குமார், இந்த படத்தை இயக்குகிறார்.
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. முதல் படத்தில் காதலை மையமாக வைத்து, அதில் வெற்றியும் கண்ட பிரேம்குமார், இப்போது குடும்ப பாங்கான கதையை கையில் எடுக்கிறார். இதில் அரவிந்த்சாமி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவராக பி சி ஸ்ரீராம் இணைந்திருப்பதால், கார்த்தி பிரேம் குமார் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





