- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் தலைமையில் விழா, தயாரிப்பாளர்ளை கண்டித்து வரும் 14ம் தேதி வேலை நிறுத்தம் - பெப்சி...

முதல்வர் தலைமையில் விழா, தயாரிப்பாளர்ளை கண்டித்து வரும் 14ம் தேதி வேலை நிறுத்தம் – பெப்சி அறிவிப்பால் கோலிவுட்டில் பரபரப்பு!

- Advertisement -

தமிழ் சினிமா சார்ந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வதாரம் உள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர்கள் நலன் சார்ந்து பலகட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் திரைப்படத் தொழில் நன்கு செழித்திருக்க தயாரிப்பாளர் சங்கம், தொழிலாளர்கள் அமைப்பும் ஒற்றுமையாக இருகரம் கோர்த்து செயல்படுவதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

ஆனால் இதற்கு நேர் மாறாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே நீடித்து வரும் மோதல் இப்போது உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படப்பிடிப்புகளில் பணியாற்றக்கூடாது என்று பெப்சி அறிவித்துள்ளது.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெப்சி அமைப்பின் தலைவராக இயக்குனர் ஆர்கே செல்வமணி இருந்து வருகிறார்.

இந்நிலையில் வேலை நிறுத்தம் குறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திரைப்படத் துறையைச் சேர்ந்த 23 சங்கங்களை உள்ளடக்கிய தொழிலாளர் கூட்டமைப்பான பெப்சி அமைப்பில் 25,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகள், புதிதாக தமிழ் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர். இதற்காக முதல்வர் தலைமையில் புதிய அமைப்புக்கான துவக்க விழா நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை கண்டித்து வரும் 14ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே நீடித்து வரும் பிரச்னை இப்போது ஒரு நாள் ஸ்டிரைக் செய்யும் அளவுக்கு முற்றிப் போயிருக்கிறது. விரைவில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் சினிமா துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சற்று முன்