நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாத இறுதியில், உடல் நலக் குறைவால் மறைந்தார். அப்போது அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் நேற்று நடந்த விழாவில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லை.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா பல கட்டங்களாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த விழாவில் ஐந்து பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. பிரபல பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். ஆனால் நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது இந்த நிகழ்ச்சியில் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தில், அடுத்தகட்ட விழாவில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது. விஜயகாந்த் இறந்ததும் அவருக்கு இருந்த அனுதாப அலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள மத்திய அரசு, அவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்துவிட்டு, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மத்திய அரசோடு கூட்டணி அமைக்காததால், இப்போது அவருக்கு விருது வழங்கவில்லையா என்று ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அரசு விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்ததும் அது குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, இந்த விருது அறிவிக்கப்பட்டது சந்தோஷம்தான். ஆனால், அது விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது அவர்கள் கொடுத்திருந்தால் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கும். இந்த விருது காலம் கடந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று அப்போதே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலம் கடந்து அறிவித்த விருதை இப்போதும் கொடுக்காமல் இன்னும் மத்திய அரசு காலம் நீடிப்பது சரியில்லை என்றாலும், பத்மபூஷன் விருது கொடுத்து தான் விஜயகாந்தின் பெருமையை இந்த நாடு அறிய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர் வாழும்போதே மக்களால் கொண்டாடப்பட்ட தலைவர். பல நூறு விருதுகளுக்கு சமமாக, தமிழக மக்களின் மனங்களை வென்றவர் என்று கேப்டன் ரசிகர்கள், விஜயகாந்த் புகழ் பாடி வருகின்றனர்.





