- Advertisement -
Homeபொழுதுபோக்குபழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி - தலைமுறைகளை...

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி – தலைமுறைகளை கடந்த சிறந்த நடிகர் என்றும் புகழுரை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்களால் சில கேரக்டர்கள் சிறப்பாக அமைவதுண்டு. சில கேரக்டர்கள், நடிகர்களுக்கு சிறப்பாக அமைவதும் உண்டு. தன்னிகரில்லாத பல திரைக் கலைஞர்களை கண்டிருக்கிறது நமது தமிழ் சினிமா. இப்போதும் அவர்கள் குணச்சித்திர நடிகர்களாக தங்களது நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட சிறந்த நடிகர்களில் ஒருவர்தான் டெல்லி கணேஷ். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவுக்கு சம்மந்தியாக ஜவுளிக்கடைக்காரராக நடித்திருப்பார். தன்னை பார்க்க வரும் விசுவிடம், என் மகள் வசந்தியை உங்கள் மகன் சிவாவுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க விரும்புகிறேன், என வெள்ளந்தியாக பேசுவார்.

- Advertisement -

அதே போல் திருமதி ஒரு வெகுமதி படத்தில் மருமகள் தயவில் வாழும் மாமனார் மாமியார் கேரக்டரில் டெல்லிகணேஷ் மாமனாராக நடித்திருப்பார். செய்யாத திருட்டை ஏற்றுக்கொண்டு வீட்டை விட்டு செல்வார். அதே போல் அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசன் பிஏவாகவும், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பாலக்காட்டு ஐயராகவும் கக்கத்தில் வெற்றிலை சீவல் பெட்டியுடன் வாயில் வெற்றிலையை குதப்பியபடி கமலுக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

கமல்ஹாசனுக்கு மிக பிடித்தமானவர் டெல்லி கணேஷ் என்பதால் நாயகன், அபூர்வ சகோதரர்கள், காதல் பரிசு, சிம்லா ஸ்பெஷல் என பல படங்களில் கமலுடன் நடிக்க வாய்ப்பளித்தார். அதே போல் பாபா, மூன்றுமுகம் உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். சிந்து பைரவி படத்திலும் தவில் வித்வானாக அசத்தியிருப்பார்.

- Advertisement -

நேற்றிரவு நடிகர் டெல்லி கணேஷ் 80 வயதான நிலையில் முதுமை காரணமாக திடீரென இயற்கை எய்திவிட்டார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மரண பயம் காரணமாக இறந்துபோகும் கேரக்டரில் நடிக்க டெல்லி கணேஷ் மறுத்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் மோடி கூறியிருப்பதாவது, புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர். ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும், தலைமுறை கடந்து ரசிகர்களை கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவுகூரப்படுவார். நாடகத் துறையிலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் ஓம் சாந்தி என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்