தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இப்போதும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. நடிகையாக மட்டுமின்றி சில மாதங்களுக்கு முன் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கி தயாரிப்பாளராகவும் சமந்தா மாறியிருக்கிறார்.
இப்போது அவர் கவிதை எழுதி கவிஞராகவும் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒப்பனை கலைஞர் அவ்னி ராம்பியாவுடன் நீண்ட நேரம் பேசிய பிறகு தனக்கு சில எண்ணங்கள் தோன்றியதாகவும் அதை ஆங்கிலத்தில் அவர் கவிதையாக பதிவு செய்ததாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகை சமந்தா கூறியிருப்பதாவது, மலை இறக்கத்தை 30களுக்குப் பிறகுதான் இந்த உலகம் சொல்லித் தருகிறது. உங்கள் பளபளப்பு மங்கும். உங்கள் அழகு சரிந்து நழுவும். காலம் ஓடுவதைப் போலவே அழகான முகம் கச்சிதமான உடல்கட்டு வாழ்க்கை இவை எல்லாவற்றிற்காகவும் 20களில் விரைய வேண்டும்.
எனது 20கள் மிகவும் பரபரப்பானது. ஓய்வறியாதது. அவசரகதி உடனேயே அவற்றை அணுகினேன். போதுமான அளவு அழகாக இருப்பதற்கும் அவசரம், போதுமான அளவு உணர்வதற்கு அவசரம், நான் நானாக இருப்பதற்கும் அவசரம். ஆனால் இந்த அவசரகதியில் எனக்குள் நான் இழந்தவற்றை யாரும் பார்க்கவில்லை. நான் பூரணமாக இருக்கிறேன் என்று யாரும் சொல்லவில்லை. ஒருவர் கூட சொல்லவில்லை. இந்த அன்பு உண்மையான அன்பு. என்னை வேறு நபருக்காக மாற்றிக்கொள்ளாமல் என்னை நான் அறிந்தது போலவே அதை கண்டறிவேன்.
30களுக்கு வந்தால் ஏதோ ஒன்று மிருதுவாகியுள்ளது. ஏதோ ஒன்று திறந்த வெளியாகியிருக்கிறது. என் தவறுகளின் கணத்தை என்னை சுற்றியே இழுத்து வந்ததை நிறுத்திவிட்டேன். அதற்குள் நான் பொருந்தி இருப்பதை நிறுத்தி விட்டேன். உலகுக்கு காட்டும் வாழ்க்கை, எனக்குள் நான் வாழும் வாழ்க்கை என இரு வாழ்க்கை வாழ்வதை நிறுத்திவிட்டேன். இப்போது எல்லாம் பொது இடங்களில் இருக்கும் நான், யாரும் கவனிக்காத போது இருக்கும் நானாகவே இருக்கிறேன். என் உணர்வுகளின் மிகவும் உயிர்ப்புடன் இருந்தது அப்போதுதான்.
அனைத்து பெண்களுக்கும் பொருந்தக் கூடியது இது. அவளுடைய முழுமையை விரும்புகிறேன். அவளிடம் இருக்கும் ஒருவித அமைதியை விரும்புகிறேன். அவளுக்குள் எல்லாம் இருப்பதை அவள் உணர்கிறாள். ஏனெனில் எந்தவித வருத்தமும் எந்தவித வேஷமும் இன்றி நீங்கள் நீங்களாக இருக்கும்போது நீங்கள் மட்டும் விடுதலை பெறவில்லை. இந்த உலகமும் விடுதலை ஆகிறது என்று ஆங்கிலத்தில் அந்த கவிதையை சமந்தா பதிவிட்டுள்ளார் இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரமுத்துவுக்கே போட்டி கவிஞராக வருவார் போல தெரிகிறதே என ரசிகர்கள் பலர் கலாய்த்துள்ளனர்.





