தமிழ் சினிமாவில் கவிஞர் நா முத்துக்குமாரின் பாடல்கள் என்றாலே தேனில் விழுந்த பலாச்சுளை போல இசை ரசிகர்களுக்கு தித்திப்பானது. அவர் எழுதிய பாடல்கள் ஏராளமானவை இன்றும் ரசிகர்களின் உதடுகளில் உச்சரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. யுவன் சங்கர் ராஜா இசையில் நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் தென்றல் காற்றை போலவே இதமானது.
குறிப்பாக செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் நா முத்துக்குமாரின் பெயரை சொல்லும். அதே போல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடித்த காதல் படத்தின் மொத்த பாடல்களும் நா முத்துக்குமாரின் வரிகள்தான். அதே போல் அங்காடித் தெரு களவாணி மதராசப் பட்டணம் பாடல்கள் அனைத்துமே நா முத்துக்குமார் எழுதியவை தான்.
இந்த படங்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் நா முத்துக்குமாரின் வளமையான வலிமையான யதார்த்தமான கவிதை நயத்தை சொல்லும். மிக யதார்த்தமான கவிஞர். ஆனால் துரதிஷ்டவசமாக 41 வயதிலேேயே உடல் நலக்குறைவால் மறைந்து விட்டார். இந்நிலையில் மறைந்த பாடல் ஆசிரியர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்த நாளை ஒட்டி சென்னையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது இதில் ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய எழுத்தாளர் மற்றும் திரைப்பட நடிகர் பவா செல்லதுரை கூறியதாவது, நா முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காது. சுவையான கரும்பை அவர் ஏன் விரும்பவில்லை என்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. சின்ன வயதில் அவர் தனது அம்மாவை இழந்தவர்.
அம்மாவின் மறைவை ஒட்டி பள்ளியில் இருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
சிறுவனாக இருந்த முத்துக்குமார் அம்மாவின் மரணத்தைப் பார்த்து அழக்கூடாது என்பதற்காக அந்த வழியாக சென்ற லாரியில் இருந்து கீழே விழுந்த ஒரு கரும்பை உடைத்து நா முத்துக்குமாரிடம் கொடுத்து இருக்கிறார்கள். அதை சுவைத்துக் கொண்டே அம்மா உடலை பார்த்து இருக்கிறார் நா முத்துக்குமார்.
அதற்குப் பிறகு கரும்பை பார்க்கும் போதெல்லாம் அவருடைய அம்மாவின் நினைவு வந்திருக்கிறது. அதனால் அவர் கரும்பு சாப்பிடுவது இல்லை என்ற தகவலை பவா செல்லதுரை பகிர்ந்து இருக்கிறார். மேலும், பெரும்பாலும் நா முத்துக்குமார் பாடல்களை எழுத சென்னையில் இருந்து காரில் ஆம்பூர் வரை செல்வார். அங்கே பிரியாணி சாப்பிட்டுவிட்டு திரும்பி விடுவார். அதற்குள் பாடலை எழுதி முடித்து விடுவார் என்று அவரது சில நண்பர்கள் சுவாரசியமான இந்த தகவலையும் பகிர்ந்தனர்.





