நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கிறார். சுப்ரமணியபுரம் ராம் பருத்திவீரன் தெனாவெட்டு அறை 305ல் கடவுள் தாமிரபரணி நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் கஞ்சா கருப்பு காமெடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
அவரை சினிமாவில் நடிகராக கொண்டு வந்த இயக்குனர்கள் பாலா, அமீர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் கஞ்சா கருப்பு. அதனால் தனது சொந்த ஊரில் சினிமா நடிகரான வளர்ந்த பிறகு கட்டிய வீட்டுக்கு பாலா – அமீர் என பெயர் சூட்டி தனது நன்றியை காட்டினார் நடிகர் கஞ்சா கருப்பு. இப்போதும் பாலா, அமீர் முன்பு அமராமல் கைகட்டி நின்று பேசுவதே கஞ்சா கருப்புவின் பழக்கமாக உள்ளது.
இந்நிலையில் வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து பலத்த நஷ்டத்தை சந்தித்த நடிகர் கஞ்சா கருப்பு, கடன்களில் சிக்கினார். அதனால் தனது சொந்த வீட்டை விற்றுவிட்டார். கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் உடனே வீட்டை காலி செய்ய சொன்னதாகவும், மதுரைக்கு கஞ்சா கருப்பு சென்ற நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டு உரிமையாளர் வீட்டுக்கு வெள்ளையடித்ததாகவும் அப்போது தனது கலைமாமணி விருது டாலர் மற்றும் ரூ. 1.5 லட்சம் பணம் திருடு போனதாகவும் மதுரவாயல் போலீசில் கஞ்சா கருப்பு புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் நடிகர் கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார் தந்துள்ளார். அதில் கடந்த 2021ம் ஆண்டில் தனது வீட்டை ரூ. 20 ஆயிரம் வாடகைக்கு எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு வாடகை பாக்கி ரூ. 3 லட்சம் தர வேண்டும். மேலும் வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விட்டுள்ளார்.
குடி சீட்டாட்டம் அன்னிய நபர்கள் வருகையால் எனது வீட்டை லாட்ஜ் போல மாற்றி விட்டார். இதுகுறித்து கேட்டால் கஞ்சா கருப்பு எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார் என்று அந்த புகாரில் வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார். இப்படி கஞ்சா கருப்பு மீது வீட்டு உரிமையாளரும், அவர் மீது கஞ்சா கருப்பும் புகார் கூறியிருப்பதால் இந்த விவகாரம் விஸ்வரூபமாகி வருகிறது.





