நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் நேற்று புஷ்பா 2 படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளான நேற்று உலகம் முழுவதும் 275 கோடி ரூபாய், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 8.5 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த சாதனை படமாக புஷ்பா 2 சொல்லப்படுகிறது. இதுவரை எந்த படமும் முதல் நாளில் ரூ. 275 கோடி என்ற அளவுக்கு வசூலிக்கவில்லை என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியில் வெளியான புஷ்பா 2 முதல் நாளில் மொத்தம் 67.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஷாருக்கான் நடித்த ஜவான் 64 கோடி ரூபாய், யாஷ் நடித்த ஜேிஎப் 52 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில் புஷ்பா 2 படம், ஜவான் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஐதராபாத்தில் ஒரு தியேட்டரில் புஷ்பா 2 படம் பிரிமியர் ஷோ நடந்தது. படம் ரிலீஸாவதற்கு முன்பே நடந்த இந்த பிரிமியர் ஷோவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த தியேட்டரில் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூனும் வந்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து அங்கிருந்த போலீசார், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். இதனால் பயங்கரமாக தள்ளுமுள்ளு கூட்ட நெரிசல் ஏற்பட்டு அந்த பகுதியில் களேபரமானது. அப்போது நெரிசலில் சிக்கி 39 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்தார். அவர் தன் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் படம் பார்க்க வந்திருந்த நிலையில், ஒரு குழந்தையும் நெரிசலில் சிக்கி காயமடைந்தது. தாய் இறந்த நிலையில், குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது.
புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த சம்பவம், ஐதராபாத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரிமியர் ஷோ நடந்த அந்த தியேட்டர் மீது ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அங்கு வந்த நடிகர் அல்லு அர்ஜூனை பார்க்க முண்டியடித்த ரசிகர் கூட்டத்தால்தான் இப்படி ஒரு நெரிசல் ஏற்பட்டு பெண் உயிரிழக்க காரணமானதாக கூறி, நடிகர் அல்லு அர்ஜூன் மீதும் ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.





