தமிழ்நாட்டை உலுக்கிய பல கெலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் அண்ணாச்சி, ஜீவஜோதி மீது கொண்ட அளவற்ற காதலால் அந்த பெண்ணின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்தார் என்ற அந்த வழக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு வழக்காக இருந்தது.
சரவணபவன் ஹோட்டல் மூலம் தோசையை பிரபலப்படுத்தி தோசா கிங் என்ற பாராட்டுக்கு சொந்தக்காரராக இருந்தவர் ராஜகோபால் அண்ணாச்சி. இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில், மீண்டும் மூன்றாவது திருமணம் செய்தால், அவர் பெரிய அளவில் வாழ்க்கையில் செல்வாக்கு மிக்கவராக மாறுவார் என்ற மூடநம்பிக்கையில் இருந்தார்.
அப்போது ஜீவஜோதி என்ற திருமணமான பெண் மீது ஆசை கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை வைத்து கொன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து, பல ஆண்டுகள் அந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது. அந்த வழக்கில் அவர் குற்றவாளி என ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை எதிர்த்து ராஜகோபால் அண்ணாச்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது என உச்ச நீதிமன்றமும் கூறிவிட்டதால், அவர் சிறைக்கு சென்றார். சிறையில் சில ஆண்டுகள் இருந்த அவர் உடல் நலக்குறைவால் 18 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இந்த கொலை வழக்கு சம்பவம் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது வேட்டையன் பட இயக்குனர் தசெ ஞானவேல் தோசா கிங் என்ற இந்தி படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ராஜகோபால், ஜீவஜோதி வாழ்க்கையை மையப்படுத்தியது. இந்த வழக்கில் ஜீவஜோதி எப்படி தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை, சவால்களை எதிர்கொண்டார் என்ற அடிப்படையில் இந்த படத்தை அவர் உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், பல ஆண்டுகளாக ராஜகோபால் அண்ணாச்சியுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்த நடிகர் தம்பி ராமையா, பல ஆண்டுகளுக்கு முன்பே ராஜாக்கிளி என்ற பெயரில் ராஜகோபால் அண்ணாச்சி சொன்ன பல தகவல்களை கொண்டு, இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்போது ஜீவஜோதி கோணத்தில் தசெ ஞானவேல் இயக்கும் படமும், அண்ணாச்சி சொன்ன கோணத்தில் தம்பி ராமையா ஏற்கனவே இயக்கிய படமும் அடுத்தடுத்து திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விருமாண்டி படம் போல ஆளாளுக்கு ஒரு கோணத்தில் சொன்ன ஒரு கதையாக இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





