- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூரில் நடந்த துயர சம்பவம்… தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பிய சிபிஐ -...

கரூரில் நடந்த துயர சம்பவம்… தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பிய சிபிஐ – தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

- Advertisement -

கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி இரவு தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதில் 110 பேர் வரை பலத்த காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் இப்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல கட்டமாக நடத்தப்பட்ட விசாரணைகளில் இதுவரை போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் காயமடைந்தவர்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜூனா கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகி தங்களது விளக்கங்களை அளித்துள்ளனர்.

அதேபோல் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், அது தொடர்பான பதிவுகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

அதில் வருகிற 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பான விசாரைணக்கு நேரில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பி இருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக திமுக அரசுகளை கடுமையாக விஜய் விமர்சிக்கும் நிலையில் இந்த விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதும் அதிக கவனம் பெற்றுள்ளது. ஒருவேளை சிபிஐ விசாரணையில் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இருக்குமோ என்ற கவலையில் தவெக கட்சியினரும் தளபதி ரசிகர்களும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.

சற்று முன்