ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி அதை யூடியூபில் வெளியிட்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். வெள்ளி திரைக்குச் செல்ல ஏங்கிக் கொண்டிருந்த அவருக்கு, வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பு வழங்க கோமாளி திரைப்படம் உருவாகியது. 90ஸ் கிட்ஸ் களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு மிகக் கச்சிதமாக அந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன்.
படத்தில் யோகி பாபு நகைச்சுவையில் வெளுத்து வாங்க, ஹியூமர் காட்சிகள் அதிகம் இருந்ததால் கோமாளி திரைப்படத்தை பலரும் கொண்டாடினர். தனி ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு ஜெயம் ரவிக்கு, ஒரு பெயர் சொல்லும் திரைப்படமாகவும் அது அமைந்தது. இதன் பிறகு, தனது இரண்டாவது திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன்.
லவ் டுடே என்னும் பெயரில் அவர் எடுத்த இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்தது. நவீன யுகத்தில் இளைஞர்கள் செல்போன் கையும் ஆகவே சுற்றிவர, காதலர்கள் இருவரும் தங்கள் செல்போனை பரிமாறிக் கொண்டால் என்னென்ன வில்லங்கம் எல்லாம் நடக்கும் என்பதை சுவாரஸ்யமாக கூறியிருந்தார் இயக்குனர்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல், நகைச்சுவை காட்சிகள் நிறைய இருந்ததால் லவ் டுடே திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் சென்றனர். ஒரு பக்கா பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்த லவ் டுடே திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் வெற்றி படங்கள் லிஸ்டில் முதல் ஆளாக சேர்ந்தது. இதன் பிறகு அவர் எந்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், திடீரென மீண்டும் நடிகராகும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் திரைப்படத்தில் ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை, லியோ படத்தை எடுத்த 7 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா வருகிறார். இதன் சூட்டிங் பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து உடன், பிரதீப் ரங்கநாதன் இணைவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் லவ் டுடே படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. எல் ஐ சி திரைப்படத்தில் நடித்து வரும் அதே சமயத்தில், லவ் டுடே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எழுதும் பணியிலும் பிரதீப் ஈடுபட்டிருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





