இயக்குனரிலிருந்து நடிகராக மாறி இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் முதலாவதாக, ரவி மோகனை வைத்து கோமாளி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். 90ஸ் கிட்ஸ்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்ல பிரதீப் ரங்கநாதனையும் ஒரு இயக்குனராக அடையாளப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் இயக்கத்தோடு மட்டும் நின்று கொள்ளாமல் அவர் ஹீரோவாக நடிக்கவும் செய்தார். காதல் நகைச்சுவை எமோஷன் என அனைத்து பிளாட்டுகளிலும் ரவுண்ட் கட்டி அடித்தார் பிரதீப் ரங்கநாதன். இதன் காரணமாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் திரைப்படம் மூலம் பிரதீப் ரங்கநாதன் முழு நேர நடிகரானார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம், வசூல் மழை குவித்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படமான டியூட், வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. கீர்த்தீஸ்வரன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மமீதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து பாடல்கள் ஹிட் ஆன நிலையில், படத்தின் முன்னோட்டமும் பெரும் வரவேற்பு பெற்றது.
இப்படி இருக்க, டியூட் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் பிரதீப் ரங்கநாதன் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், லவ் டுடே திரைப்படத்தில் முதலில் மமீதா பைஜூவைதான் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த சமயத்தில் அவர் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஒரு குறும்படத்தில் அவர் அப்பளம் கடித்து சாப்பிடுவது கூட அவ்வளவு க்யூட்டாக இருக்கும்.
இந்தத் திரைப்படத்தில் அவருக்கான எமோஷனல் பக்கங்களும் இருக்கின்றன. டிராகன் திரைப்படத்தின் ஒன் லைனை அஸ்வந்த் மாரிமுத்து எனக்கு சொல்லும்போது நான் அதை உடைக்க விரும்பவில்லை. இருந்தாலும் அவர் எல்லாவற்றையும் மாற்றினார். சொல்லப்போனால் டிராகன் திரைப்படத்தின் இடைவேளை காட்சி கோர்ட்டில் நடைபெறுவது போன்றுதான் இருக்கும். நீ கல்லூரிக்கு செல்லுகிறாயா? அல்லது சிறைக்குப் போகிறாயா என்று கேட்பது போன்று காட்சிகள் வைக்க திட்டமிடப்பட்டிருந்தன. அடுத்ததாக சயின்டிஃபிக் தொடர்பான ஒரு கதையை நான் இயக்க இருக்கிறேன் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.





