ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த கோமாளி படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதி காட்சியில் ஆட்டோ டிரைவராக கேமியோ ரோலில் நடித்திருந்தார். கோமாளி படம், வெற்றிப் படமாக அமைந்து பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் லவ்டுடே என்ற படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இன்றைய இளம் காதலர்களின் உணர்வுகளை, மொபைல் போன்களின் வழியாக அவர்களது செயல்பாடுகளை பிரதிபலிக்கும் திரைக்கதையில் படத்தை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார் பிரதீப் ரங்கநாதன்.
இதில் சத்யராஜ், ராதிகா போன்ற சீனியர் நடிகர்களின் பண்பட்ட நடிப்பு, படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருந்தது. யோகி பாபுவும் தன் பங்கை சிறப்பாக செய்திருந்தார். படத்தின் நாயகனாக பிரதீப் ரங்கநாதனும், படத்தின் நாயகியாக இவானாவும் வேற லெவலில் படத்தின் வெற்றியை உறுதி செய்தனர். தமிழில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இந்த படம் டப் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் வசூலை குவித்தது.
தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தை இயக்க முதலில் கமிட் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். ஆனால் ஹீரோ ஆகும் ஆசையில், அந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில், கீர்த்தீஸ்வரன் இயக்கும் படத்தில் இப்போது ஹிரோவாக நடிக்கிறார்.
இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கீர்த்தீஸ்வரன். அவர் சொன்ன கதையில், தெலுங்கு நடிகர் நானியை நடிக்க வைக்க, தயாரிப்பு நிறுவனம் முயற்சித்தது. அவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி தருவதாக டைரக்டரிடம் சொன்னது. ஆனால் என்னுடைய கதையில் அந்த கேரக்டரில் நானி நடித்தால் சரியாக வராது என கீர்த்தீஸ்வரன் நானி வேண்டாம் என மறுத்து விட்டார்.
அதன்பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் அந்த கதையை சொல்ல, அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஆனால், ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை டைரக்ட் செய்ய அவர் கமிட் ஆனதால், இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அதன்பிறகுதான் அந்த ஹீரோ வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது. அதிலும், பிரேமலு நாயகி மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





