விஜய் தற்போது தனது கடைசி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதனை இயக்குவது எச் வினோத். பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி என மூன்று பெண் கதாபாத்திரங்கள் இதில் இருக்கிறார்கள். இதுபோக பிரகாஷ்ராஜ் பாபி தியோல் நரேன் உள்ளிட்டோரும் படத்தில் நடித்து வருகிறார்கள். அரசியல் கலந்த கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை, கே வி என் என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் விஜய்க்கு இங்கு தனி சாம்ராஜ்யம் உள்ளது. இப்படியான சூழலில் அவரது கடைசி திரைப்படம் வெளியாவதால் இதன் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை குறி வைத்து ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு, ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை குறி வைத்து இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் சூழலில், ஒரு வாரம் படத்தின் கலெக்ஷன் அள்ளும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
அதுவும் விஜய் முழுக்க முழுக்க அரசியல்வாதி ஆகிவிட்ட சூழலில், அதனை மையப்படுத்தியே இதன் கதை எழுதப்பட்டிருப்பதால் வசனங்களும் கூர்மையாக இருக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்துடன், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனும் உறுதி செய்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரவி மோகன் அதர்வா ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் இதில் நடிக்கிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வரும் சூழலில், இரண்டு அரசியல் திரைப்படங்களும் ஒரே பண்டிகையில் களம் காண்கின்றன.
இதுபோக கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீலின் அடுத்த திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் ஐ வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில்தான் இதுவும் பொங்கல் ரிலீசை குறி வைத்துள்ளது. இது பான் இந்தியா அளவில் எடுக்கப்படும் திரைப்படம் என்பதால், தெலுங்கு மற்றும் கன்னடத் திரையுலகில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரையரங்குகள் சற்று குறைவாகவே கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.





