தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார் சந்தானம். அவரும் நடிகர் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள். பாஸ் என்கிற பாஸ்கரன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என சில படங்களில் ஆர்யா – சந்தானம் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆர்யா திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
நடிகர் ஆர்யாவின் சொந்த நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடித்த படம் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியிருக்கிறார். வருகிற 16ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் இருந்து கிஸ்ஸா 47 என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடல் வரிகளில் பார்க்கிங் காசுக்கு கோவிந்தா பாப்கான் டாக்ஸ் கோவிந்தா ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா என அந்த பாடல் உள்ளது.
திருப்பதி திருமலையில் ஒலிக்கும் சீனிவாச கோவிந்தா எனும் வெங்கடேசப் பெருமாள் பாடலை கிண்டல் செய்வது போன்று அந்த பாடல் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதவழிபாடு, சடங்குகளை கிண்டலடித்து தவறாக சித்தரித்துள்ள இந்த பாடலுக்காக சந்தானம் ஆர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என சேலம் போலீசில் பக்தர்கள் தரப்பில் புகார் தரப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருப்பதியிலும் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனசேனா கட்சியினர் திருப்பதி போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் நேற்று திருமலைக்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும் இந்து மதம் மற்றும் கடவுளை அவமதிக்கும் சர்ச்சைக்குரிய இந்த பாடலை நீக்க வேண்டும் என பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான பானு பிரகாஷ் ரெட்டி டிடி நெக்ஸ்ட் லெவல் படக் குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கோவிந்தா பெயரில் வெளியிடப்பட்ட பாடல் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.
இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு எங்கள் வக்கீல் மூலம் நடிகர் சந்தானம் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தமிழக அரசு ஒரு நாத்திக அரசு. இந்த பாடலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. படத்தின் ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் 15 நாட்களுக்குள் ஸ்ரீவாரி பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





