விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம், அவரது திரையுலக கேரியரில் மிக முக்கியமான காவியம் இன்றைக்கு கூறலாம். மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதையை எடுத்திருந்தார்கள்.
கிரிக்கெட் விளையாடும் போது, விஜய் சேதுபதிக்கு பின்னந்தலையில் அடிபட, அவர் கடந்த சில ஆண்டுகளாக நடந்ததை மறக்கிறார். அதுமட்டுமல்லாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு சமயத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் என்பதால், விபத்தை அவரது நண்பர்கள் மூடி மறைத்து அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இதுதான் படத்தின் கதை.
அதை எந்த அளவுக்கு நகைச்சுவையாக எடுக்க முடியுமோ, அதை மிகச் சரியாக படத்தில் காட்டி இருந்தார்கள். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை பார்த்தவர் பிரேம்குமார். அப்போது விஜய் சேதுபதியுடன் நெருக்கம் ஏற்பட பின்னாளில் அவரை வைத்து 96 திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கினார்.
தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களுக்கு ஒரு மைல் கல்லாக அமைந்த 96 திரைப்படம், இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ராமாக விஜய் சேதுபதியும், ஜானுவாக த்ரிஷாவும் அந்தந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார்கள். படத்திற்கு இசையும் பக்கபலமாக அமைய, திரையிட்ட இடங்களில் எல்லாம் 96 வாகை சூடியது.
இதனைத் தொடர்ந்து, கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகியோரை முதன்மை கதாபாத்திரங்களாக வைத்து மெய்யழகன் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பிரேம்குமார். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், பலரிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றது. கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி நடிப்பும் அற்புதமாக இருந்ததாக பலரும் பாராட்டினார்கள்.
இப்படியான சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பிரேம்குமாரிடம் வீடியோ காலில் பேசிய பாடகி சின்மயி, அவரது அடுத்த திரைப்படம் குறித்து கேட்டார். அதற்கு 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து இருப்பதாக கூறிய பிரேம்குமார் தற்போது திரில்லர் படத்திற்கான கதையை எடுக்கும் முயற்சியில் உள்ளதாக தெரிவித்தார். அண்மையில் அவர் விக்ரமுடன் இணைவதாக ஒரு தகவல் கசிந்தது. அனேகமாக இந்த த்ரில்லர் படத்திற்காகதான் சியான் உடன் பிரேம்குமார் இணைய இருக்கலாம் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.





