தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், பலருக்கும் மிகவும் பிடித்துப்போன முதன்மை படமாக விளங்குவது 96. பிரேம்குமார் இயக்குனராக அறிமுகமாகி இருந்த இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடித்திருந்தார்கள். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பள்ளி பருவத்தில் அனைவருக்கும் ஒரு காதல் மலர்ந்திருக்கும். அதையே நினைத்துக் கொண்டு உருகி இருக்கும் ஒரு இளைஞன், தனது பள்ளி பருவ காதலியை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தால் எப்படி இருக்கும் என்பதைதான் காட்டியிருப்பார் இயக்குனர் பிரேம்குமார். படத்திற்கு இசை மிகப் பெரிய வலுவாக அமைய பலராலும் 96 கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மெய்யழகன் திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். முதல் திரைப்படத்தில் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த இயக்குனர் தனது இரண்டாம் திரைப்படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார். அவரின் கதைக்கு ஏற்றது போலவே அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் கச்சிதமாக நடித்திருந்தனர்.
ஆனால் மெய்யழகன் திரைப்படம் வெளியான சமயத்தில் அது, பெரிய அளவு கவனத்தைப் பெறவில்லை. சொல்லப்போனால் 2k கிட்ஸ் அந்த திரைப்படத்தை விரும்பவில்லை. பிறகு ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியான பிறகு, பாராட்டுகள் குவிய ஆரம்பித்தன. பலரும் பிரேம் குமாரின் இயக்கத்திற்கு ஹார்ட்டின்களை பறக்க விட்டனர்.
இப்படியான சூழலில் அவர் மீண்டும் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஒரு பேட்டியில் பிரேம்குமாரே உறுதி செய்தார். ஆனால் இதில் விஜய் சேதுபதி நடிக்கப் போவதில்லை என்றும், அவருக்கு பதில் பிரதீப் ரங்கநாதனிடம் பிரேம்குமார் கதை கூறியதாகவும் ஆனால் அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் பரவின.
ஐசரி கணேஷ் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதன் முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரங்களை வைத்தே எடுக்கப்படும் என பிரேம்குமார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனிடம் இயக்குனர் கதை கூறியது உண்மைதான் என்றும் ஆனால் அது 96 திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை அல்ல எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.





