தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு நடிகையாக இருந்தவர் பிரியாமணி. குறிப்பாக அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் நடிகை பிரியாமணி வாழ்ந்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக 2007ம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் பிரியாமணி.
அதன்பிறகும் பல படங்களில் பிரியாமணி நடித்த நிலையில் பெரிய ஹீரோக்களான விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் பிரியாமணி நடிக்கவில்லை. அதனால் இரண்டாம் நிலை கதாநாயகியாகவே, தேசிய விருது பெற்ற நிலையிலும் பின்தங்கியே இருந்தார்.
தமிழில் மலைக்கோட்டை, கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம், தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என பல படங்களில் நடித்தும் விஷால், தனுஷ், ஜீவன், பரத், பிருத்விராஜ் போன்ற நாயகர்களுடன் மட்டுமே பிரியாமணி ஜோடி சேர முடிந்தது.
எனினும் சில படங்களில் போதிய கவர்ச்சி காட்டியும் பிரியாமணி அசத்தியிருந்தார். எனினும் அவருக்கான இடம் கிடைக்காத நிலையில் தெலுங்கு பக்கம் சென்ற பிரியாமணி, இப்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஜவான், மைதான் போன்ற இந்தி படங்களிலும் பிரியாமணி நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை பிரியாமணி பங்கேற்றார். அப்போது நீங்கள் ஏன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் அதிகமாக நடிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு வெளிப்படையாக பதில் அளித்த நடிகை பிரியாமணி, நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், அவர்கள் படங்களில் என்னை நடிக்க வைத்தால், அவர்கள் நடிப்பை நான் மிஞ்சி விடுவேன் என பயப்படுகின்றனர் என்று என்னிடம் சிலர் சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும். டாப் ஹீரோக்கள் படங்களில் நடிக்க ஏன் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எனக்கும் தெரியவில்லை. அதை அந்த ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று பிரியாமணி அந்த நேர்காணலில் ஓப்பனாக கூறியிருக்கிறார்.





